“அசாமில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்” - தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா உறுதி

“அசாமில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்” - தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா உறுதி
Updated on
2 min read

சாய்கோன் (அசாம்): அசாமில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்றும், அதன்பிறகு எவரும் நான்கு திருமணங்கள் செய்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அசாம் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சாய்கோன் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, ‘‘அசாம் இயற்கை வளம் மிக்கது. ஆனால், காங்கிரஸ் கட்சி அசாமை ஊடுருவல்காரர்களிடம் ஒப்படைத்துவிட்டது. ஊடுருவல்காரர்கள் ஏழைகளின் நிலங்களை அபகரித்து வருகின்றனர். அவர்கள் காசிரங்கா வன நிலங்களையும் விட்டுவைக்கவில்லை.

கடந்த 10 ஆண்டுகளில், பாஜக அரசு 1,50,000 ஏக்கர் நிலத்தை ஊடுருவல்காரர்களிடமிருந்து மீட்டெடுத்துள்ளது. மீண்டும் ஒருமுறை பாஜக அரசை அமைத்திடுங்கள்; அசாம் முழுவதையும் ஊடுருவல்காரர்களிடமிருந்து மீட்டெடுக்க பாஜக பாடுபடும்.

காங்கிரஸ் அசாமின் பழங்குடி மக்களிடமிருந்து நிலத்தைப் பறித்து ஊடுருவல்காரர்களிடம் ஒப்படைத்தது. ஆனால் இன்று, பாஜக அரசு 1,00,000 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை பழங்குடி மக்களுக்குத் திருப்பிக் கொடுத்துள்ளது. இதை நான் பாராட்டுகிறேன், அசாம் முதல்வரை வாழ்த்துகிறேன்.

கடந்த 10 ஆண்டுகளில், நாங்கள் ஊடுருவல்காரர்களை அடையாளம் கண்டுள்ளோம். ஹிமந்த பிஸ்வாவை மீண்டும் முதல்வராக்குங்கள், நாங்கள் ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் ஒருவர்பின் ஒருவராக வெளியேற்றப் பாடுபடுவோம்.

அசாமின் பாலஸ்பரியை ஒரு கல்வி மையமாக மாற்ற நாங்கள் விரும்புகிறோம். இங்கு IIM-ஐ கொண்டுவர முடிவெடுத்துள்ளோம். ஆனால், காங்கிரஸ் கட்சியோ IIM-ஐ (இந்திய மேலாண்மை நிறுவனம்) எதிர்க்கிறது. இன்று நான் ராகுல் காந்திக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் எவ்வளவு எதிர்த்தாலும் பாலஸ்பரியில் IIM நிச்சயம் கட்டப்படும்.

காங்கிரஸ் கட்சி வெறும் 4 மருத்துவக் கல்லூரிகளை மட்டுமே விட்டுச் சென்றிருந்தது. நாங்கள் 14 மருத்துவக் கல்லூரிகளைக் கட்டியுள்ளோம். தற்போது கூடுதலாக 10 மருத்துவக் கல்லூரிகளை பாஜக அரசு கட்டி வருகிறது. பாலஸ்பரி மற்றும் அசாமின் மகன்களும் மகள்களும் இங்கேயே படித்து, அசாமிலேயே வேலை செய்வதை உறுதி செய்வதே மோடியின் விருப்பமாகும்.

அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் இந்தியாவின் எதிரி நாட்டுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார், ஆனால் அவர் மவுனம் காக்கிறார். காங்கிரஸ் 60 ஆண்டுகளில் அசாமில் மூன்று பாலங்களை மட்டுமே கட்டியது, அதேசமயம் பாஜக 10 ஆண்டுகளில் ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் நீளமான பாலங்களை அசாமில் கட்டியது.

அசாமுக்கு உத்வேகம் அளிப்பதே எங்கள் கொள்கை. இதற்காக நாங்கள் 13 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, அசாமில் அமைதியைக் கொண்டுவர பாடுபட்டுள்ளோம். அசாமில் ஊடுருவல்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாங்கள் அசாமில் 'பொது சிவில் சட்டம்' (UCC)-ஐ அமல்படுத்துவோம். அதன் பிறகு, எவரும் நான்கு திருமணங்கள் செய்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

குடும்ப தலைவிகள் ஒவ்வொருக்கும் மாதம் ஒன்றுக்கு 3,000 ரூபாய் வழங்கப்படும். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 11,000 ரூபாய் வழங்கப்படும். 2 லட்சம் இளைஞர்களுக்கு நாங்கள் அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்’’ என தெரிவித்தார்.

“அசாமில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்” - தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா உறுதி
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு - ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை போட்டி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in