புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானுக்கு எதிராக தரைவழித் தாக்குதல்களைத் தொடங்க இந்திய ராணுவம் தயாராக இருந்ததாக ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
2026-ம் ஆண்டின் முதல் செய்தியாளர் சந்திப்பை ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இன்று புதுடெல்லியில் நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூர் இன்னும் செயல்பாட்டில் உள்ளது. பாகிஸ்தானின் எந்தவொரு வருங்கால தவறான முயற்சிக்கும் பதிலடி கொடுக்கப்படும். ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய ராணுவம் தனது படைகளைத் திரட்டியது. பாகிஸ்தான் ஏதேனும் தவறு செய்திருந்தால் தரைவழித் தாக்குதல்களை நடத்த இந்திய ராணுவம் முழுமையாக தயாராக இருந்தது.
ஆபரேஷன் சிந்தூர் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது. மே 7ம் தேதி அதிகாலை 12.22-க்கு தொடங்கப்பட்டு, மே 10-ம் தேதி வரை 88 மணி நேரம் நீடித்த இந்த நடவடிக்கை, ஆழமாகத் தாக்குதல் நடத்தி, பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அழித்து, நீண்டகால அணுசக்தி அச்சுறுத்தலை முறியடித்து கணிப்புகளை மாற்றி அமைத்தது.
இந்த முறை நாங்கள் எடுத்த நடவடிக்கை, குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் (பஹல்காமில்) நடந்த துப்பாக்கிச் சூட்டை நாங்கள் எதிர்கொண்ட விதம், வழக்கமானது அல்ல. வழக்கமான போர் எல்லையை விரிவுபடுத்திய நடவடிக்கை இது. இதில், நாங்கள் அவர்களின் சுமார் 100 பேரை ஒழித்தோம். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து மேற்கு எல்லை மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள நிலைமை, உறுதியாக கட்டுப்பாட்டில் உள்ளது. 2025-ம் ஆண்டில் 31 பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டனர். அவர்களில் 65% பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். தற்போது உள்ளூர் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் உள்ளது.
பயங்கரவாத ஆட்சேர்ப்பு ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம். 2025-ல் வெறும் இரண்டு பேர் மட்டுமே சேர்க்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. வலுவான வளர்ச்சிப் பணிகள், புத்துயிர் பெறும் சுற்றுலா, அமைதியான அமர்நாத் யாத்திரை ஆகியவை இதற்கான அடையாளங்கள். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை, கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரியைவிட அதிகம். நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அமர்நாத் யாத்திரை மேற்கொண்டனர். பயங்கரவாதத்தில் இருந்து சுற்றுலா நோக்கிய மாற்றம் படிப்படியாக உருப்பெற்று வருகிறது.
ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு தொடர்பாக பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே 1963ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா சட்டவிரோதமானது என கருதுகிறது. அந்த பள்ளத்தாக்கில் நடைபெறும் எந்தவொரு நடவடிக்கைகளையும் இந்தியா அங்கீகரிக்கவில்லை. இவ்வாறு ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி, பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் நடத்திய பயங்கரவாத துப்பாக்கிச் சூட்டில் 22 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் எனும் ராணுவ நடவடிக்கையை எடுத்தது. மே.7-ம் தேதி தொடங்கிய இந்த நடவடிக்கை மே.10-ம் தேதி முடிவுக்கு வந்தது.