

புதுடெல்லி: பாக்கெட் உணவுகளால் ஏற்படும் ஊட்டச்சத்து சார்ந்த அபாயங்கள் குறித்து நுகர்வோர் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அதிக அளவு சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் முன்புறத்தில் எச்சரிக்கை லேபிள்களை அறிமுகப்படுத்துவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
அப்போது, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவு செயல்படுத்தப்படாதது குறித்து மத்திய அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். நீதிபதிகள் தெரிவித்ததாவது: “நீதிமன்றத்தை நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறீர்களா? உத்தரவுகளைச் செயல்படுத்தாமல் அலட்சியமாக இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்.
எவ்வளவு அழுத்தங்கள் இருந்தாலும் நீதிமன்ற உத்தரவை நீங்கள் பின்பற்றித்தானே ஆக வேண்டும்? இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?இந்த நாட்டு மக்கள் ஆரோக்கியமாக இருக்கக் கூடாதா? குறிப்பாக வளரும் குழந்தைகள் நலமாக இருக்க வேண்டாமா? பாக்கெட்டுகளில் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடுவதில் என்ன தயக்கம்? உற்பத்தியாளர்களுக்கு இது பிடிக்காமல் போகலாம்; ஆனால், தாங்கள் எதை உட்கொள்கிறோம் என்பதை நுகர்வோர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்” என்று நீதிபதிகள் காரசாரமாகக் கேள்விகளை எழுப்பினர்.
மேலும், நீதிமன்றத்தின் பரிந்துரைகளை மத்திய அரசு தானாக முன்வந்து செயல்படுத்தத் தவறினால், நீதிமன்றமே உரிய உத்தரவைப் பிறப்பிக்க நேரிடும் என்றும் எச்சரித்தனர். இறுதியாக, பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை வாசகம் பொறிப்பது தொடர்பாக 2 வார காலத்திற்குள் உரிய முடிவை எடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்; தவறினால் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என எச்சரித்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.