

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் புதிதாகப் பதவி ஏற்ற பாஜக முதல்வர் சுவேந்து அதிகாரி, ‘மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள், மதரஸாக்களில், வந்தே மாதரம் பாடுவது கட்டாயம்’ என்று அறிவித்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் காசீம் ரசூல் இலியாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”மேற்கு வங்க மதரஸாக்களில் நடைபெறும் காலை நேரப் பிரார்த்தனையின் போது, வந்தே மாதரம் தேசியப் பாடலின் 5 சரணங்களையும் முழுமையாகப் பாடுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இது மக்களின் மத அடையாளத்தையும், அரசியலமைப்புச் சுதந்திரத்தையும் மீறுவது ஆகும்.
இதுபற்றி, கேரள அரசை எதிர்த்து விஜய் இமானுவேல் என்பவர் தொடுத்த வழக்கில், தேசிய அல்லது மத நிகழ்ச்சிகளில் பங்கேற்க எந்தவொரு குடிமகனையும் கட்டாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதற்கு முரணாக மேற்கு வங்க அரசின் இந்த உத்தரவு அமைந்துள்ளது. எனவே, மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, தனது முடிவைத் திரும்பப் பெற வேண்டும்.
வந்தே மாதரம் பாடலின் சில சரணங்களில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள், இஸ்லாமியக் கொள்கையான தவ்ஹீத் எனும் ஏகத்துவத்துக்கு முரணானவை. எனவே, முஸ்லிம் மாணவர்களை அந்தப் பாடலைப் பாடுமாறு கட்டாயப்படுத்துவது, அவர்களின் மத அடையாளத்தையும் அரசியலமைப்புச் சுதந்திரத்தையும் நேரடியாக மீறும் செயலாகும். ஒரு மதச்சார்பற்ற நாட்டில் ஒரு சமூகத்தின் மதம் அல்லது கலாச்சார மரபுகளை மற்றொரு சமூகத்தின் மீது திணிக்கக் கூடாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.