யுவராஜ் மேத்தா
‘அப்பா... என்னை காப்பாற்றுங்கள்...’ - காரோடு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த இன்ஜினீயரின் கடைசி வார்த்தை
நொய்டா: உத்தர பிரதேசத்தின் நொய்டா பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் மேத்தா (27). சாப்ட்வேர் இன்ஜினீயரான அவர் குருகிராமில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த 16-ம் தேதி இரவு வழக்கம்போல அலுவலகத்தில் இருந்து அவர் காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். நள்ளிரவு 12.05 மணிக்கு நொய்டாவின் செக்டர் 150 பகுதியில் கார் வந்தபோது எதிர்பாராதவிதமாக 70 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.
அந்த பள்ளத்தில் தேங்கியிருந்த சாக்கடை நீரில் கார் மூழ்க தொடங்கியது. விபத்தில் படுகாயமடைந்த யுவராஜ் மேத்தா, மிகுந்த சிரமப்பட்டு காரின் மேற்பகுதியில் ஏறினார். தனது தந்தை ராஜ் குமார் மேத்தாவை செல்போனில் அழைத்த அவர், “அப்பா.. என்னை காப்பாற்றுங்கள்… கார் பள்ளத்தில் கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. நான் சாக விரும்பவில்லை. என்னை எப்படியாவது மீட்டு செல்லுங்கள்’’ என்று கதறினார்.
உடனடியாக அவரது தந்தை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். நள்ளிரவு 12.50 மணிக்கு போலீஸாரும், தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தனர். ஆனால் நள்ளிரவு என்பதால் 70 அடி பள்ளத்தில் அவர்கள் இறங்கவில்லை.
அப்போது அந்த வழியாக வந்த டெலிவரி ஊழியர் மொகீந்தர் என்பவர் துணிச்சலாக பள்ளத்தில் இறங்கி யுவராஜ் மேத்தாவை மீட்க முயற்சி செய்தார். அதற்குள் கார் முழுமையாக தண்ணீரில் மூழ்கிவிட்டது. சுமார் 2 மணி அளவில் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் வந்து யுவராஜ் உடலை மீட்டனர்.
இது குறித்து ராஜ் குமார் மேத்தா கூறும்போது, "என் மூத்த மகள் பிரிட்டனில் வசிக்கிறார். ஒரே மகன் யுவராஜ் கார் பள்ளத்தில் விழுந்திருக்கிறது. எனது மகன் செல்போனில் அழைத்து அப்பா, என்னை காப்பாற்றுங்கள் என அழுதார். ஆனால் எனது மகனை என்னால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது" என்றார்.
டெலிவரி ஊழியர் மொகீந்தர் கூறியதாவது: சம்பவ இடத்தில் சுமார் 100 பேர் கூடி இருந்தனர். போலீஸார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் நீச்சல் தெரியாது என்று கூறி தண்ணீரில் இறங்கவில்லை. யாரும் உதவிக்கு வராத நிலையில் நான் தனியாக கயிறு கட்டி பள்ளத்தில் இறங்கினேன். அதற்குள் கார் தண்ணீரில் மூழ்கியது.
நான் மேலே இருந்து பார்க்கும்போது யுவராஜ் காரின் மேற்பகுதியில் நின்று செல்போனில் பிளாஷ் வெளிச்சத்தை காண்பித்து கொண்டிருந்தார். விரைந்து செயல்பட்டு இருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம். இவ்வாறு மொகீந்தர் தெரிவித்தார்.
போலீஸ் தரப்பில் கூறும்போது, “பள்ளத்தில் சுமார் 30 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியிருந்தது. அதில் கார் மூழ்கிவிட்டது. யுவராஜ் மேத்தாவுக்கு நீச்சல் தெரியாததால் அவரால் கரையேற முடியவில்லை’’ என்று தெரிவித்தனர்.
