இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர்
புதுடெல்லி: அமெரிக்காவுக்கு, இந்தியாவை விட முக்கியமான நட்பு நாடு வேறு எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அறிவிக்கப்பட்டுள்ள செர்ஜியோ கோர், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அடுத்த ஆண்டு அல்லது அதற்கு அடுத்த ஆண்டுகளுக்குள் இந்தியாவுக்கு வருவார் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, டெல்லி வந்த அவர், அமெரிக்க தூதரகத்தில் தனது வருகை உரையை ஆற்றினார். அப்போது அவர், ‘‘அமெரிக்காவும் இந்தியாவும் பொதுவான நலன்களால் மட்டுமல்ல, மிக உயர்ந்த மட்டத்தில் வேரூன்றிய உறவாலும் பிணைக்கப்பட்டுள்ளன.
இந்திய - அமெரிக்க உறவுக்கு வர்த்தகம் மிகவும் முக்கியமானது என்றாலும், பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம் போன்ற பிற முக்கியமான துறைகளிலும் இரு நாடுகளும் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன.
உலகின் பழமையான ஜனநாயகத்துக்கும், உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்துக்கும் இடையிலான ஒரு சந்திப்பு புள்ளி இது. அமெரிக்க அதிபருடன் நான் கடைசியாக இரவு உணவு அருந்தியபோது, தனது கடைசி இந்திய வருகை குறித்தும், இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமருடனான தனது சிறந்த நட்பு குறித்தும் நினைவுகூர்ந்தார். அதிபர் விரைவில் அடுத்த ஆண்டு அல்லது இரண்டு ஆண்டுகளில் இங்கு வருவார் என்று நம்புகிறேன்.
அமெரிக்காவுக்கு இந்தியா மிகவும் அத்தியாவசியமான கூட்டாளி. இந்தியாவைிட முக்கியமான நட்பு நாடு வேறு எதுவும் இல்லை. வரும் மாதங்களில் அல்லது ஆண்டுகளில் மிகவும் லட்சியமான செயல்திட்டத்தை முன்னெடுப்பதே தூதராக எனது இலக்கு. ஒவ்வொருவரும் தங்களின் வலிமை, மரியாதை மற்றும் தலைமைப் பண்புகள் மூலம் நாம் இதைச் செய்வோம்.
இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தையின் அடுத்தகட்டம் என்ன என்பது குறித்து பலரும் என்னிடம் கேட்டிருக்கிறீர்கள். இதில், இரு தரப்பினரும் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான பேச்சுவார்த்தை நாளை நடைபெற இருக்கிறது. இந்தியா உலகின் மிகப் பெரிய நாடு. எனவே, இதை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வருவது எளிதான காரியம் அல்ல.
அதிபர் ட்ரம்ப் உடன் நான் உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளேன். பிரதமர் மோடியுடனான அவரது நட்பு உண்மையானது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்.
உண்மையான நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், இறுதியில் அவர்கள் தங்கள் வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்வார்கள். பாக்ஸ் சிலிக்கா கூட்டமைப்பில் முழுமையான உறுப்பினராக சேர இந்தியாவுக்கு அடுத்த மாதம் அழைப்பு வரும் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்’’ என தெரிவித்தார்.
பாக்ஸ் சிலிகா கூட்டமைப்பு என்பது பாதுகாப்பான, மீள்திறன் கொண்ட, புத்தாக்கங்கள் நிறைந்த சிலிக்கான் விநியோகச் சங்கிலியை உருவாக்குவதற்காக அமெரிக்க தலைமையில் தொடங்கப்பட்டுள்ள ஒரு முன் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.