

புதுடெல்லி: வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026 தொடர்பாக, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்துக்கு, இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான சட்ட விவகாரங்கள் “இந்தியாவின் உள்விவகாரங்கள்” என்றும், அவை குறித்து முடிவெடுப்பது இந்திய நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும் அமைச்சகம் தெரிவித்தது.
மத்திய அரசு வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா (எஃப்சிஆர்ஏ), 2026, மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த மசோதா குறித்து, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரைலி மூர் கடும் விமர்சனம் செய்திருந்தார். கடந்த செவ்வாயன்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் ரைலி மூர், “இந்தத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டால், இந்திய அரசு தேவாலயங்கள் மற்றும் மததொண்டு நிறுவனங்களை கையகப்படுத்துவதற்கு வழிவகுக்கும்.
இது கிறிஸ்தவர்களுக்கு எதிரான தெளிவான தாக்குதல் ஆகும்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். ரைலி மூரின் கருத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “எஃப்சிஆர்ஏ மசோதா தொடர்பாக அமெரிக்க எம்.பி. ரைலி மூர் தெரிவித்த கருத்துகளை நாங்கள் கவனித்துள்ளோம். இந்தியா தொடர்பான சட்ட விவகாரங்கள் எங்கள் உள்விவகாரங்கள். அவை குறித்து நாட்டின் நாடாளுமன்றம்தான் முடிவெடுக்கிறது” என்றார்.