

புதுடெல்லி: நாட்டின் 77-வது குடியரசுத் தின விழாவில் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர்லேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது அவர் இந்திய மற்றும் ஐரோப்பிய கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் தனித்துவமான உடையில் பங்கேற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. உர்சுலா வழக்கமாக அணியும் மேற்கத்திய வகை ‘பேண்ட்-சூட்'களுக்குப் பதிலாக, இந்தியப் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் பட்டு உடை அணிந்து இந்த விழாவில் பங்கேற்றது ஆக்கபூர்வமான ராஜதந்திர நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
டெல்லி கடமைப் பாதையில் நேற்று நடைபெற்ற வண்ணமயமான குடியரசு தின அணிவகுப்பிற்கு வருகை தந்த உர்சுலா வான் டெர் லேயன், மெரூன் மற்றும் தங்க நிறம் கலந்த பனாரஸ் சில்க் புரோகேட்' (Silk Brocade) வகை 'பந்த்கலா' ஜாக்கெட்டையும், அதற்குப் பொருத்தமாக ஆஃப்-ஒயிட் நிற பேண்ட்டையும் அணிந்திருந்தார்.
‘புரோகேட்' என்பது தறி மூலம் நெய்யப்படும் ஒருவகை ஆடம்பரமான துணி வகையாகும். இதில் தங்கம் அல்லது வெள்ளி இழைகளைக் கொண்டு (ஜரிகை) சித்திரங்கள் போன்ற வேலைப் பாடுகள் உருவாக்கப்படுகின்றன. தையல் வேலைப் பாடுகள் ஏதுமின்றி, நெசவிலேயே இத்தகைய கலைநயத்தை உருவாக்குவது இதன் சிறப்பம்சமாகும். குறிப்பாக, பனாரஸ் புரோகேட் உலக அளவில் மிகவும் புகழ்பெற்றது.