பிஹாரில் வாரிசு அரசியலுக்கு எதிர்ப்பு - ஆர்எல்எம் கட்சியின் முன்னணி தலைவர்கள் 7 பேர் விலகல்

உபேந்திர குஷ்வாஹா

உபேந்திர குஷ்வாஹா

Updated on
2 min read

பாட்னா: ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா கட்சித் தலைவர் உபேந்திர குஷ்வாஹா, தனது மகனை அமைச்சராக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியின் மாநிலத் தலைவர் உட்பட முன்னணி தலைவர்கள் 7 பேர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் நிதிஷ் குமாருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த உபேந்திர குஷ்வாஹா, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2013ல் ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி என்ற கட்சியை தொடங்கினார். பின்னர், 2021ல் தனது கட்சியை ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைத்தார். அதன் பின் மீண்டும் 2023ல் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா கட்சியைத் தொடங்கினார்.

கடந்த 2024 தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிட்ட அவரது கட்சி, அதில் தோல்வியைத் தழுவியது. எனினும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா, சமீபத்தில் நடந்து முடிந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4ல் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற நான்கு பேரில், உபேந்திர குஷ்வாஹாவின் மனைவி ஸ்னேஹலதாவும் ஒருவர்.

இந்நிலையில், தேர்தலிலும் போட்டியிடாத, மேலவை உறுப்பினராகவும் இல்லாத தனது மகன் தீபக் பிரகாஷை, நிதிஷ் குமார் அமைச்சரவையில் கேபினெட் அமைச்சராக்கினார் உபேந்திர குஷ்வாஹா.

இதனால், அதிருப்தி அடைந்த கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். தனது மகனை அமைச்சராக்கியதை நியாயப்படுத்திய உபேந்திர குஷ்வாஹா, “தீபக் பிரகாஷ் பள்ளியில் தோல்வி அடைந்தவர் அல்ல (தேஜஸ்வி யாதவ் பள்ளியில் தோல்வி அடைந்தவர்). அவர் கணினி அறிவியலில் பொறயியல் பட்டதாரி. அவருக்கு நல்ல வேலையும் கிடைத்தது.

அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தீபக் பிரகாஷ்க்கு தன்னை நிரூபிக்க நேரம் கொடுங்கள். அவர் உங்கள் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் நிறைவேற்றுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நான் எடுத்திருப்பது ஒரு கடினமான முடிவுதான். எனது இந்த முடிவு நான் வாரிசு அரசியலை முன்னெடுக்கிறேன் என்ற குற்றச்சாட்டுக்கு வழிவகுக்கும். ஆனாலும், இது எனது முடிவு” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உபேந்திர குஷ்வாஹாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியின் மாநில தலைவர் மகேந்திர குஷ்வாஹா, துணைத் தலைவர் ஜிதேந்திர நாத், மாநில பொதுச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான ராகுல் குமார், மாநில பொதுச் செயலாளரும் நாளந்தா மாவட்ட பொறுப்பாளருமான ராஜேஷ் ரஞ்சன் சிங், மாநில பொதுச் செயலாளரும் ஜமுய் மாவட்ட பொறுப்பாளருமான பிபின் குமார் சவுராசியா, மாநில பொதுச் செயலாளரும் லக்கிசராய் மாவட்ட பொறுப்பாளருமான பிரமோத் யாதவ், ஷேக்புரா மாவட்ட பொறுப்பாளர் பப்பு மண்டல் ஆகியோர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

விலகல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகேந்திர குஷ்வாஹா, “சோசலிஸ கொள்கைகளுக்கு முரணாக வாரிசு அரசியலை அவர் முன்னெடுத்துள்ளார். பொதுவாழ்க்கையின் ஒழுக்க நெறிகள் குறித்து அதிகம் பேசும் அவர், நேரம் வரும்போது தனது குடும்பத்தினருக்கே அதிகாரத்தை வழங்குகிறார்.” என குற்றம் சாட்டியுள்ளார்.

கட்சியின் மாநில துணைத் தலைவர் ஜிதேந்திர நாத், “நான் ஒன்பது வருடங்களாக கட்சியில் இருக்கிறேன். இப்போது எனது சொந்த அரசியல் எதிர்காலம் குறித்து எனக்கே உறுதியாகத் தெரியவில்லை. உபேந்திர குஷ்வாஹா வாரிசு அரசியல் வலையில் விழுந்துவிட்டார். வாரிசு அரசியலுக்கு இதைவிட சிறந்த உதாரணம் வேறு என்ன இருக்க முடியும்? இப்போது அவருக்கும் குடும்ப அரசியல் நடத்தும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in