

புதுடெல்லி: துறவியான தன் மகனுக்கு தாய் சாவித்ரி தேவி கண்களில் கண்ணீர் மல்க பிச்சை (அன்னதானம்) வழங்கியதாக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தன் தாயுடனான நெகிழ்ச்சியான தருணத்தை தகனத்தின்போது நினைவுகூர்ந்தார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தாய் சாவித்ரி தேவி நேற்று (நவ.20) மறைந்தை ஒட்டி, உத்தராகண்டின் பவுரி மாவட்ட பஞ்சூர் கிராம மக்கள் பல நினைவுகளை அசைபோட்டு உணர்ச்சிவசப்படுகின்றனர். அதில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் துறவற நிகழ்வு முக்கியமாகப் பேசப்படுகிறது.
கடந்த 1993-இல் கோரக்பூருக்குச் சென்றிருந்தார் அஜய் சிங் பிஷ்த், அங்கு ஜனவரி 14, 1994 அன்று துறவறம் ஏற்று 'யோகி ஆதித்யநாத்' ஆனார். சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் ஒரு துறவியாகத் தனது கிராமத்துக்கு திரும்பினார். ஆனால், அப்போது, அவரது நோக்கம் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவது இல்லை. மாறாக, துறவற மரபில் உள்ள ஒரு முக்கியமான சடங்கை நிறைவேற்றுவதே ஆகும்.
யோகி ஆதித்யநாத் துறவறம் பூண்ட பிறகு, முதன்முதலாக தனது பூர்வீக கிராமமான பஞ்சூருக்குச் சென்றபோது இது நிகழ்ந்தது. ஒரு சந்நியாசியாக, அவர் தனது பெற்றோரிடம் பிச்சை (அன்னதானம்) கேட்க வேண்டியிருந்தது.
தனது இல்லத்தின் முற்றத்தில் சந்நியாசியாக நின்ற மகனைக் கண்ட தாயின் மனதில் உணர்ச்சிகளின் பெருவெள்ளம் கரைபுரண்டது. அவர் தனது மகனுக்கு அரிசி, பழங்கள் மற்றும் நாணயங்களை பிச்சையாக வழங்கினார். அவற்றை அளிக்கும்போது தாயின் கண்களில் கண்ணீர் தளும்பியது.
தன் மகனை மீண்டும் பிரிந்து செல்ல அனுமதிக்க அவரது மனம் விரும்பவில்லை. அம்மகனைத் தடுத்து நிறுத்தி, மீண்டும் செல்ல வேண்டாம் என்று கெஞ்சினார். தாயின் அன்புக்கும், துறவியாக வாழ வேண்டும் என்ற மகனின் உறுதியான முடிவுக்கும் இடையே அந்த உணர்ச்சிகரமான தருணம் நீடித்தது.
யோகி ஆதித்யநாத் தனது தாயிடம், ’அம்மா, நான் இங்கே வாழ்வதற்காக வரவில்லை, பிச்சை கேட்பதற்காகவே வந்திருக்கிறேன்’ என்று கூறினார். இவை சில வார்த்தைகள் மட்டுமே என்றாலும், அவற்றுக்குப் பின்னால் ஒரு தாயின் அன்பும், துறவியாக வாழ வேண்டும் என்ற மகனின் அசைக்க முடியாத உறுதியும் இருந்தன.
அன்று, தனது மகனுக்கு பிச்சையளிப்பதன் மூலம் துறவற மரபை அந்தத் தாய் நிறைவேற்றினார். ஆனால், மகனைப் பிரிய அவரது மனம் துளியும் விரும்பவில்லை என்பதுதான் உண்மை. சாவித்திரி தேவி எப்போதும் தனது மகனை ஆசிர்வதித்ததோடு, அவரது முடிவை மதித்து வந்தார் என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.
எளிமையான வாழ்க்கை
தனது மகன் உத்தரப் பிரதேச முதல்வரானாலும், தாயின் உலகம் பஞ்சூரிலேயே சுருங்கியிருந்தது. அவர் எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்தார். சாவித்ரி தேவியின் வாழ்க்கை முறையில் ஆடம்பரமோ அல்லது அந்த மண்ணுடனான பிணைப்பில் மாற்றமோ ஏற்படவில்லை.
சாவித்ரி தேவியின் சிறப்பம்சம்
துறவியாக, முதல்வருமான பின் யோகி ஆதித்யநாத் கிராமத்திற்கு வரும்போதெல்லாம், அவரை 'அஜய்' என்ற பெயரிலேயே தாய் சாவித்ரி அழைத்தார். தனது மகனின் அரசியல் அந்தஸ்தை ஒருபோதும் தனது சொந்த அடையாளமாக மாற்றிக்கொள்ளாதது சாவித்ரி தேவியின் சிறப்பம்சமாகப் புகழப்படுகிறது.
சிறந்த உதாரணமான தாய்
அவர் தனது மகனின் பதவியைப் பயன்படுத்தி எந்தச் சலுகையையும் பெற முயலவில்லை. அரசு சலுகைகளையும் எதிர்பார்க்கவில்லை. அவரது வாழ்க்கை எளிமை, சுயமரியாதை மற்றும் தனது மண்ணுடனான பிணைப்புக்கு ஒரு சிறந்த உதாரணமாக இருந்தது.
கவனத்தைப் பெற்ற உறவு
முதல்வரான பின்பு, யோகி ஆதித்யநாத்தின் பொது வாழ்க்கை மிகவும் பரபரப்பானாலும், அவரது தாயாருடனான உறவு தொடர்ந்து பலரது கவனத்தைப் பெற்று வந்தது. சில சமயங்களில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தனது பூர்வீக கிராமத்திற்குச் சென்று தாயாரின் பாதங்களைத் தொட்டு வணங்கினார்.
முதல்வர் வீட்டில் சந்திப்பு
தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தார். யோகி முதல்வரான பிறகு, தாய் - மகன் சந்திப்புகள் பஞ்சூர் கிராமத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. முதல்வர் யோகியின் முதல் பதவிக் காலத்தின்போது, லக்னோவில் அவரது இல்லத்திற்குச் சென்று ஒரே ஒருமுறை மகனைச் சந்தித்தார் தாய் சாவித்ரி தேவி.