

சந்தாலி மாநாட்டில் பேசிய குடியரசுத் தலைவர் முர்மு.
புதுடெல்லி: மேற்கு வங்கத்துக்குச் சென்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முறைப்படி வரவேற்காமல் அவமதிப்பு நிகழ்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு மத்திய உள்துறைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தின் சிலிகுரி அடுத்த பிதான் நகரில் 9-வது சந்தாலி பழங்குடியினர் சர்வதேச மாநாடு கடந்த 7-ம் தேதி நடைபெற இருந்தது. இதில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், மாநில அரசு திடீரென கோசாய்பூருக்கு மாநாட்டை மாற்றியது.
இதற்கிடையே, மாநாட்டில் பங்கேற்பதற்காக பாக்டோக்ரா விமான நிலையத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வந்தார். மரபுப்படி, குடியரசுத் தலைவரை வரவேற்க மாநில முதல்வரோ, அமைச்சரோ வரவேண்டும். ஆனால், முர்முவை வரவேற்க சிலிகுரி மேயர் கவுதம் தேவ் மட்டுமே வந்திருந்தார். இந்த சூழலில், மாநாட்டில் பேசிய குடியரசுத் தலைவர் முர்மு, ‘‘முதல்வர் மம்தா பானர்ஜிஎன் மீது அதிருப்தியில் இருக்கிறாரா?’’ என்று வேதனை தெரிவித்தார்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் வருகையின்போது நடந்த மரபு மீறல் தொடர்பாக மேற்கு வங்க மாநில தலைமைச்செயலர் நந்தினி சக்ரவர்த்தியிடம் மத்திய உள்துறைச் செயலர் கோவிந்த் மோகன் அறிக்கைகோரியுள்ளார். குடியரசுத் தலைவரை வரவேற்கவும், வழியனுப்பவும் முதல்வர், தலைமைச் செயலர், டிஜிபி ஏன் வரவில்லை?
குடியரசுத் தலைவருக்காக அமைக்கப்பட்டிருந்த கழிவறையில் தண்ணீர் வசதி இல்லாமல் போனது ஏன்? பயணப் பாதையில் குப்பை குவிந்து கிடந்தது ஏன்? இதற்குப் பொறுப்பான டார்ஜிலிங் ஆட்சியர், கூடுதல் ஆட்சியர், சிலிகுரி காவல் ஆணையர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று விளக்கம் அளிக்குமாறு உள்துறைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
தலைவர்கள் கண்டனம்: மம்தா அரசின் செயல்பாட்டுக்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மஜத மூத்த தலைவர், மத்திய அமைச்சர் குமாரசாமி: குடியரசுத் தலைவர் பதவி என்பது நமது குடியரசின் இறையாண்மை, ஒற்றுமை, கண்ணியத்தின் அடையாளம். குடியரசுத் தலைவரை அவமதிப்பது, நம் அரசியலமைப்புச் சட்டத்தையே அவமதிப்பதற்கு சமம்.
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி: நடந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்கள், கண்ணியத்துக்கு ஏற்ப குடியரசுத் தலைவர் பதவியை அனைவரும் மதிக்க வேண்டும்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: அரசியலமைப்புச் சட்டப் பதவிகள் வெறும் சம்பிரதாய அடையாளங்கள் அல்ல. அவை நமது குடியரசின் கண்ணியத்தை பிரதிபலிப்பவை. அதற்கு உரிய மரியாதை அளிப்பது அவசியம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மரபை மீறவில்லை என மம்தா விளக்கம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை எதிர்த்து கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று 3-வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது: குடியரசுத் தலைவரையும், அரசியலமைப்பு சட்டத்தையும் நாங்கள் மதிக்கிறோம். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை எங்கள் தாயாக கருதுகிறோம். அவரை அவமதித்ததாக எங்கள் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.
பழங்குடியினர் மாநாட்டை தனியார் அமைப்பு நடத்தியது. இதில் குடியரசுத் தலைவர் பங்கேற்பது தொடர்பான எந்த தகவலையும் அரசுக்கு தனியார் அமைப்பு தெரிவிக்கவில்லை. மாநாடு நடந்த இடத்தை நாங்கள் தேர்வு செய்யவில்லை. அந்த இடம் இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு (ஏஏஐ) சொந்தமானது. மாநாட்டை நடத்திய தனியார் அமைப்பும், மத்திய அரசின் ஏஏஐ ஆணையமுமே அனைத்து குளறுபடிகளுக்கும் பொறுப்பு.
2024-ல் முன்னாள் துணை பிரதமர் அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டபோது, குடியரசுத் தலைவர் முர்மு நின்றிருந்த நிலையில், பிரதமர் மோடி உட்கார்ந்திருந்தார். குடியரசுத் தலைவரை அவமதிப்பது பாஜகவின் கலாச்சாரம். இவ்வாறு மம்தா கூறினார்.