

கோப்புப் படம்
புதுடெல்லி: மத்திய அமைச்சரவை விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது என்றும், அப்போது வயதில் மூத்தவர்கள் பொறுப்புகளைக் குறைந்து இளம் தலைமுறையினருக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம், நீண்ட காலமாக தாமதப்படுத்தப்பட்டு வந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கம் முடிவுக்கு வருதாகத் தெரிகிறது. ஆகஸ்ட் 26-ல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இக்கூட்டத்தில் பேசிய பிரதமர், “அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய உறுப்பினர்களை சந்திப்போம்” எனக் கூறியதாகத் தெரிகிறது. முன்னதாக, சர்வதேச நாடுகளுடன் கூட்டங்கள், நேபாள வெள்ளம் என பல்வேறு முக்கியப் பணிகளால் மத்திய அரசு பணிச்சுமையில் சிக்கியிருந்தது.
இதனால், அமைச்சரவை மாற்றத்திற்கு நாள் குறிக்கப்படாமல் இருந்தது. தற்போது செப்.5 அல்லது 6-ம் தேதி இந்த மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜென்ஸீ தலைமுறையைக் கருத்தில் கொண்டு, இம்முறை அமைச்சரவையில் 24 இளைஞர்கள் அதிகரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் பெண்களின் எண்ணிக்கையும் அமைச்சரவையில் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, 70 வயதுக்கு மேற்பட்ட 12 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், தனிப்பொறுப்பு வகிக்கும் இணையமைச்சர்களாகவும் உள்ளனர். 81 வயதான ஜிதன் ராம் மாஞ்சி உள்ளிட்ட வயதில் மூத்தவர்கள் 14 பேர் அமைச்சரவையில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோரை அகற்றி அவர்களுக்கு கட்சி நிர்வாகம் மற்றும் மாநிலங்களில் கட்சிப் பொறுப்பை அளிக்கத் திட்டமிடப்படுகிறது.
செயல்திறன் அடிப்படையில் தற்போதைய அமைச்சர்கள் பலரை நீக்கவும் இந்த அமைச்சரவை மாற்றத்தில் முக்கிய அங்கமாக உள்ளது.
இதுதவிர பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் (என்டிஏ) உறுப்பு கட்சிகளுக்கும் புதிய அமைச்சரவையில் அதிக வாய்ப்பு கிடைக்க உள்ளது.
திரிணமுல் காங்கிரஸிலிருந்து பிரிந்து உருவான 20 எம்பிக்களை கொண்ட குழு இப்போது என்டிஏவில் உள்ளது. அவர்களுக்கு இடமளிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உருவாகி உள்ளது. பிஹாரின் நிதிஷ்குமார் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தை விட ஷிண்டேவின் சிவசேனாவில் அதிக எம்பிக்கள் உள்ளதால், அக்கட்சியின் அமைச்சர்கள் எண்ணிக்கை கூடும் வாய்ப்புகளும் பிரகாசமாகத் தெரிகின்றன.
மகராஷ்டிராவின் கூட்டணியான தேசியவாத காங்கிரஸும் கூடுதல் இடங்களைக் கோருகிறது.
சரத்பவாரின் என்சிபி பிரிவுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட உள்ளது. இதில், பவாரின் மகளான சுப்ரியா சுலேவின் பெயர் அதிகம் அடிபடுகிறது. இந்தமுறை, எதிர்கட்சியான திமுகவையும் அமைச்சரவையில் சேர்க்கும் முயற்சி கைகூடவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.
வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, சில மாநிலங்களில் அமைச்சர்களின் எண்ணிக்கையிலும் மாற்றம் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதான், ஜார்ஜ் குரியன் மற்றும் ரவ்னீத் சிங் பிட்டு ஆகிய மூவர் ராஜினாமா செய்துள்ளனர்.
தற்போது 29 கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்பு வகிக்கும் 5 இணையமைச்சர்கள் மற்றும் 34 இணையமைச்சர்கள் உள்ளனர். அதாவது, பிரதமர் உட்பட அமைச்சரவையில் தற்போது 69 உறுப்பினர்கள் உள்ளனர்; அமைச்சரவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 81 ஆகும். இதன் மூலம், கூடுதலாக 12 அமைச்சர்களை நியமிக்க முடியும்.