

விஜய் வடெட்டிவர் |கோப்புப் படம்
நாக்பூர்: மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே - ராஜ் தாக்கரே சகோதரர்களுக்கு இடையேயான கூட்டணியை வரவேற்பதாகக் கூறிய மூத்த காங்கிரஸ் தலைவர் விஜய் வடெட்டிவர், மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் எனத் தெரிவித்தார்.
நாக்பூரில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய் வடெட்டிவர், “ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றுபட்டுத் தேர்தலில் போட்டியிடும்போது, நாங்கள் வருத்தப்பட எந்தக் காரணமும் இல்லை. நாங்கள் அவர்களை வாழ்த்துகிறோம், அவர்கள் வெற்றி பெற விரும்புகிறோம்.
ஆனால், காங்கிரஸ் கட்சி ஒருபோதும் எம்என்எஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்பியதில்லை. நேற்றுவரை சிவசேனா மற்றும் சரத் பவாருடன் நிற்பதுதான் எங்கள் நிலைப்பாடாக இருந்தது, இன்றும் அதுவே தொடர்கிறது.
சமீபத்திய நகராட்சி மன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு மிகப் பெரிய ஒற்றைக் கட்சியாக உருவெடுத்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைக்காதபோதிலும், வாக்கு சதவீதம், கவுன்சிலர் இடங்கள் மற்றும் மேயர் பதவிகளின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி தனது கூட்டணிக் கட்சிகளை விட சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் சொந்த பலத்தில் போட்டியிடுவதில் நம்பிக்கை கொண்ட காங்கிரஸ் தொண்டர்களின் மனநிலையை இது தெளிவாகக் காட்டுகிறது.
மக்களவைத் தேர்தல் அல்லது சட்டப்பேரவை தேர்தல்களுக்கான கூட்டணிகளை உள்ளாட்சித் தேர்தல்களுடன் தொடர்புபடுத்துவது பொருத்தமற்றது. உள்ளாட்சித் தேர்தல்கள் உள்ளூர் தொண்டர்கள் மற்றும் உள்ளூர் சமன்பாடுகளைச் சார்ந்தது. எனவே எங்கள் மகா விகாஸ் அகாதி கூட்டணி முறிவதற்கு வாய்ப்பே இல்லை. சிவசேனா (யுபிடி) கட்சி இண்டியா கூட்டணியின் ஒரு பகுதியாகத் தொடர்கிறது.
மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸும் வஞ்சித் பகுஜன் அகாதியும் (விபிஏ) இணைந்து போட்டியிட ஒப்புக்கொண்டுள்ளது. வஞ்சித் பகுஜன் அகாதியுடன் மாநிலம் முழுவதும் இடப் பகிர்வு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்று அவர் கூறினார்.