

கான்பூர்: கான்பூர் நகரக் காவல் ஆணையர் ரகுபீர் லால் கூறியதாவது: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ‘கார்க் ஏவியேஷன்’ பயிற்சி மையத்திலிருந்து இரட்டை இன்ஜின் மற்றும் 4 இருக்கைகள் கொண்ட பயிற்சி விமானம் நேற்று காலை 11:30 மணிக்கு புறப்பட்டது. அதில், குஜராத்தைச் சேர்ந்த சச்சின் பாட்டியா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த அபிஷேக் பூஜாரி ஆகிய 2 விமானிகள் பயணம் செய்துள்ளனர்.
அந்த விமானத்தில் ஒருவர் பயிற்றுநராகவும் மற்றொருவர் பயிற்சி விமானியாகவும் இருந்துள்ளனர். மீண்டும் பயிற்சி மையத்தை நோக்கி அந்த விமானம் திரும்பிக் கொண்டிருந்தபோது, காலை 11:50 மணியளவில் எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்தது. கான்பூரில் கங்கை நதிக்கரையோரம் உள்ள வயல்வெளியில் அந்த பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் இரு விமானிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்த பயிற்றுநர் விமானிக்கு சுமார் 3,000 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் உள்ளது. இவ்வாறு ரகுபீர் தெரிவித்தார். இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தி, விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறியுமாறு டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் இரங்கல்: பயிற்சி விமான விபத்தில் இரு விமானிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.