

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கோலாகலமாக தொடங்கி உள்ள நிலையில், நேற்று காலை 2-ம் நாள் பிரம்மோற்சவத்தின் பாகமாக உற்சவ மூர்த்தியான மலையப்பர், வாசுகியாக கருதப்படும் சின்ன சேஷ வாகனத்தில், பாண்டுரங்கர் அலங்காரத்தில் எழுந்தருளினார். 4 மாட வீதிகளிலும் திரளான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என கோஷமிட்டவாறு சுவாமியை தரிசித்தனர்.
வாகன சேவைக்கு முன் யானை, குதிரை, காளை ஆகிய பரிவட்டங்கள் செல்ல, அவற்றிற்கு பின் ஜீயர் சுவாமிகளும் அவரது கோஷ்டிகளும் நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தை பாடியபடி சென்றனர். இவர்களுக்கு பின்னால், ஆந்திரா, தெலங்கானா, தமிழகம் உள்பட 9 மாநிலங்களை சேர்ந்த 539 நடன கலைஞர்கள் கோலாட்டம், ஒயிலாட்டம், ஒடிசி போன்ற நடனங்களுடன் மாட வீதிகளில் நடனமாடினர்.
இதனை தொடர்ந்து நேற்று மாலை ஏழுமலையான் கோயிலில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பின்னர், ஏலக்காய், வெட்டி வேர், உலர் திராட்சை, பாதாம், பிஸ்தா போன்றவற்றால் கிரீடம், மாலைகள் சூட்டி அலங்காரம் செய்யப்பட்டன. இரவு அன்ன வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று மாட வீதிகளில் வாகன சேவையை கண்டுகளித்தனர்