மேற்கு வங்க முதல்வரின் உதவியாளர் கொலை வழக்கு: பிஹார், உ.பி.யைச் சேர்ந்த மூவர் கைது

மேற்கு வங்க முதல்வரின் உதவியாளர் கொலை வழக்கு: பிஹார், உ.பி.யைச் சேர்ந்த மூவர் கைது
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளர் சந்திரநாத் ரத் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பிஹார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினரை சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. 

பிஹாரின் பக்சர் பகுதியில் மயங்க் ராஜ் மிஸ்ரா மற்றும் விக்கி மௌரியா ஆகியோரும், உ.பி.யின் பலியா மாவட்டத்தில் ராஜ் சிங் என்பவரும் பிடிபட்டனர். இவர்களில் ராஜ் சிங் மீது ஏற்கெனவே 15-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னாள் விமானப் படை வீரரும், மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளருமான சந்திரநாத் ரத், கடந்த மே 6-ஆம் தேதி இரவு தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மத்தியம்கிராம் பகுதியில் மர்ம நபர்களால் வழிமறித்துச் சுடப்பட்டார். சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் துரத்தி வரப்பட்ட அவரது காரை தடுத்து நிறுத்திய கும்பல், அவர் மீது ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சந்திரநாத் ரத்தின் காரை ஓட்டி வந்த புத்ததேவ் பேரா மூன்று குண்டுகள் பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்ற இரண்டே நாட்களில் இந்தக் கொலை நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது உதவியாளர் என்பதால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அவர் கொல்லப்பட்டதாக சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டினார். பாஜக தலைவர்கள் இதற்கு திரிணமூல் காங்கிரஸே காரணம் என்று கூறி வரும் நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கோரியுள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும் திங்கள்கிழமை பாராசாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 13 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இவர்கள் மூவரும் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகியுள்ள நிலையில், இவர்களை ஏவிவிட்ட முக்கியக் குற்றவாளிகள் யார் மற்றும் கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்துத் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்கு வங்க முதல்வரின் உதவியாளர் கொலை வழக்கு: பிஹார், உ.பி.யைச் சேர்ந்த மூவர் கைது
“தங்கம் வாங்குவதை தள்ளிப்போடுவீர்” - மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in