நீட் வினாத்தாள் கசிவு முதல் புதிய மசோதாக்கள் வரை - பிரதமர் மோடி கூறியது என்ன?

நாடாளுமன்ற என்டிஏ கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி உள்ளிட்டோர்

நாடாளுமன்ற என்டிஏ கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி உள்ளிட்டோர்

Updated on
2 min read

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். மேலும், இதுபோன்ற வினாத்தாள் கசிவுகளை தடுப்பது தேசிய பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மங்கள் மிலன் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நீட் வினாத்தாள் கசிவு குறித்தும், அதை தடுப்பதற்கான வழிகள் குறித்தும் விளக்கி உள்ளார்.

கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதை, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களுக்கு விளக்கினார். கிரண் ரிஜிஜு கூறியது: “என்டிஏ நாடாளுமன்றக் கட்சி தனது மங்கள மிலன் கூட்டத்தை நடத்தியது. இதில், அனைவரும் கலந்துகொண்டனர். அனைத்து உறுப்பினர்களுக்கும் வழிகாட்டும் வகையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

கடந்த சில மாதங்களில் இந்தியா சாதித்த சாதனைகள் குறித்து பிரதமர் மோடி முதலில் பேசினார். பல நாடுகளுடன் கையெழுத்திடப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்தும் அவர் விளக்கினார்.

நீட் வினாத்தாள் கசிவு குறித்தும் பிரதமர் மோடி பேசினார். நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பானவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற வினாத்தாள் கசிவு மீண்டும் நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதுபோன்ற வினாத்தாள் கசிவுகளைத் தடுப்பது ஒரு தேசிய பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். குறைபாடற்ற தேர்வு முறையை உருவாக்க கூட்டு முயற்சி தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் வினாத்தாள் கசிவுகள் தடுக்கப்படும் என்பதற்கான முழு உத்தரவாதத்தை நாட்டின் இளைஞர்களுக்கு அளிப்பதோடு, இந்திய இளைஞர்கள் உலகில் தலைமைப் பாத்திரத்தை வகிக்கக்கூடிய வழிகளும் அவர்களுக்கு காட்டப்படும் என உறுதி அளித்தார்.

நீட் தேர்வு விவகாரத்தில் வினாத்தாள் கசிவு குறித்த தகவல் வெளிவந்த உடனேயே அரசு உடனடி நடவடிக்கைகளை எடுத்ததாக பிரதமர் கூறினார். 13 பேர் கைது செய்யப்பட்டதையும், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறதிப்படுத்த, நீட் மறு தேர்வு நடத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். முடிவுகள் அறிவிப்பதிலும் கால தாமதம் இன்றி செயல்பட்டதாகவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்துவதில் என்டிஏ கூட்டணி ஒற்றுமையாக இருக்கும் என்று தெரிவித்த பிரதமர் மோடி, மசோதாக்களை நிறைவேற்றுவதில் எதிர்க்கட்சி சகாக்களும் இதில் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அரசியல் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் என்றும், ஆனால் நாடாளுமன்றம் நாட்டுக்காகவும், அதன் எதிர்காலத்துக்காகவும், இளைஞர்களுக்காகவும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த நோக்கத்துக்காகவே நாம் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்” என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.

<div class="paragraphs"><p>நாடாளுமன்ற என்டிஏ கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி உள்ளிட்டோர்</p></div>
‘டெல்லி போராட்டத்தில் போலீஸ் வன்முறைக்கு கண்டனம்’ - நாடாளுமன்ற இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in