சாந்தி நிகேதன் விசுவ பாரதி பல்கலை.யில் திருக்குறள் கருத்தரங்கு, கண்காட்சி துவக்கம்

சாந்தி நிகேதன் விசுவ பாரதி பல்கலை.யில் திருக்குறள் கருத்தரங்கு, கண்காட்சி துவக்கம்
Updated on: 
2 min read

புது டெல்லி: சாந்தி நிகேதனில் விசுவ பாரதி பல்கலைக் கழகத்தில் திருக்குறள் மீதான இரண்டு நாள் கருத்தரங்கு இன்று துவங்கியது. இத்துடன் திருக்குறள் குறித்த கண்காட்சியும் துவங்கியது.

நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியரான ரவீந்தரநாத் தாகூரால் 1921-ல் துவக்கப்பட்டது விசுவ-பாரதி பல்கலைகழகம். மேற்கு வங்க மாநிலம் சாந்தி நிகேதனில் அமைந்த இது மத்திய பல்கலைகழகங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. உலகப் புகழ் பெற்ற இப்பல்கலைக்கழகத்தில் தமிழ்துறையும் இயங்குகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து மாணவர்கள் தமிழில் முனைவர் பட்டம் வரை பயில்கின்றனர்.

விசுவ-பாரதி பல்கலைக்கழகத்தின் மொழி, இலக்கியம் & பண்பாட்டு நிறுவனத்தில், ‘திருக்குறள்: உலகளாவிய ஞானம், அறம் மற்றும் சமகாலப் பொருத்தம்’ என்ற தலைப்பிலான இருநாள் தேசியக் கருத்தரங்க இன்று தொடங்கின. இத்துடன் திருக்குறள் மீதானக் கண்காட்சியும் துவங்கியது. இந்த கருத்தரங்கிற்கும், கண்காட்சிக்கும் சென்னையில் அமைந்துள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் நிதியுடன் முழு ஆதரவளித்துள்ளது.

இந்நிகழ்விற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் மற்றும் மராத்தி மொழி ஆர்வலர்கள். இந்த கருத்தரங்கை விசுவ-பாரதியின், தமிழ்த் துறை மற்றும் மராத்தித் துறை இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இது ஒரு தேசிய அளவிலான கருத்தரங்கம் ஆகும்.

இது, குறிப்பாக தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களிடையே திருக்குறளின் காலத்தால் அழியாத பொருத்தத்தையும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறது. இத்துடன், சமகாலச் சமூக மற்றும் பண்பாட்டுச் சூழலில் திருக்குறளின் பங்களிப்பையும் ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மொழிபெயர்ப்பு, ஒப்பிலக்கிய ஆய்வு மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றம் ஆகியவற்றின் வாயிலாக திருக்குறள் குறித்த பரந்த அளவிலான கல்வியியல் ஈடுபாட்டை உருவாக்குவதும் இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும். கருத்தரங்கத்தின் முக்கிய அங்கமாக அமைந்துள்ள திருக்குறள் கண்காட்சியை இன்று காலை 10.30 மணிக்கு விசுவ-பாரதி பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் பிகாஷ் முகோபாத்யாய் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கருத்தரங்கின் தொடக்க விழா நடைபெற்றது. தொடக்க விழா மற்றும் கண்காட்சியில் முனைவர் த. ஜெகதீசன், பேராசிரியர் ஸ்ரீகாந்த் கெய்க்வாட் மற்றும் பேராசிரியர் மிருணால் காந்தி மண்டல் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

திருக்குறளின் இலக்கிய, தத்துவ மற்றும் பண்பாட்டு முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. உலகச் சிந்தனைப் பரப்பில் திருவள்ளுவரின் ஆழமான பங்களிப்பை காட்டுகிறது. மேலும், திருக்குறளில் இடம்பெற்றுள்ள உலகளாவிய அறநெறிகள், மனிதநேயக் கருத்துகள் மற்றும் சமூக விழுமியங்களையும் கண்காட்சி எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

கண்காட்சியில் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் பெருந்திரளாக வருகை தந்து பார்வையிட்டனர். திருவள்ளுவரின் உலகளாவிய அறச்சிந்தனையைப் பரந்த மக்களிடம் கொண்டு செல்வதில் சிஐசிடி தீவிரம் காட்டி வருகிறது. 21ஆம் நூற்றாண்டிலும் திருக்குறளின் தொடர்ச்சியான பொருத்தத்தையும் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி வருகிறது. இதற்காக, இந்திய மொழிகள் அன்றி உலகின் பல்வேறு மொழிகளிலும் திருக்குறளை மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறது.

சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்தபோது அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய மொழியிலான திருக்குறளை பரிசாக அளித்தார். இந்த நூலை மொழிபெயர்ப்பை செய்து சிஐசிடி பதிப்பித்தது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மேற்கொண்டுள்ள முக்கியமான கல்வியியல் முயற்சியாக விசுவ பாரதியின் இந்த தேசியக் கருத்தரங்கம் அமைந்துள்ளது.

சாந்தி நிகேதன் விசுவ பாரதி பல்கலை.யில் திருக்குறள் கருத்தரங்கு, கண்காட்சி துவக்கம்
பட்டயக் கணக்காளரின் சில தவறுகளுக்கு முதல்வர் விஜய் பொறுப்பாக முடியுமா? - சென்னை உயர் நீதிமன்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in