

பிஷ்கெக்: தீவிரவாத தடுப்பில் இரட்டை வேடம் கூடாது என்று எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். முதல்நாள் மாநாட்டின்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உட்பட பல்வேறு தலைவர்களை அவர் சந்தித்துப் பேசினார். உச்சி மாநாட்டின் 2-வது நாள் அமர்வு நேற்று நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கடந்த 25 ஆண்டுகளாக எஸ்சிஓ அமைப்பு வலுவடைந்து வருகிறது. இந்த கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளின் மக்களின் நன்மைக்காக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் எஸ்சிஓ அமைப்பு புதிய சாதனைகளை படைக்க வேண்டும். உலகம் முழுவதும் குழப்பமான சூழல் நிலவுகிறது. இந்த இக்கட்டான காலத்தில் நாம் ஒன்றிணைந்து செயல்பட்டு உலகத்தின் நன்மைக்காக பாடுபட வேண்டும். மனித குலத்தின் மிகப்பெரிய சவாலாக தீவிரவாதம் உருவெடுத்துள்ளது. தீவிரவாதத்தை ஒழிக்க எஸ்சிஓ நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
மேற்கு ஆசிய போரால் அந்த பிராந்தியம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் பாதிக்கப்பட்டு உள்ளது. எந்தவொரு பிரச்சினைக்கும் போர்க்களத்தில் தீர்வு காண முடியாது. அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும். இதை இந்தியா ஆணித்தரமாக வலியுறுத்தி வருகிறது. போதைப் பொருள் கடத்தல் மிகப்பெரிய குற்றம் ஆகும். இந்த போதைப் பொருட்களால் இளம் தலைமுறை சீரழிகிறது.
பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. பாதுகாப்பு, குற்றங்களை தடுத்தல், போதைப்பொருள் கடத்தலை தடுத்தல் ஆகிய விவகாரங்களில் எஸ்சிஓ நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பரஸ்பரம் தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டும். உலகத்தின் வளர்ச்சியில் போக்குவரத்து இணைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
இதை கருத்தில் கொண்டு உலக சந்தைகளை ஒருங்கிணைக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டிருக்கிறது. இதுதொடர்பாக எஸ்சிஓ நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உறுப்பு நாடுகள் இடையே சாலை, ரயில், விமான போக்குவரத்து மூலம் இணைப்புகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பாகிஸ்தான் மீது விமர்சனம்
எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, தீவிரவாத தடுப்பில் இரட்டை வேடம் போடக்கூடாது என்று குறிப்பிட்டார். பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்து வருகிறது. இதில் பெரும்பாலான தீவிரவாத அமைப்புகள் இந்தியாவுக்கு எதிராக நாச வேலைகளில் ஈடுபடுகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்தார்.