

புதுடெல்லி: தன்னுடைய போனை பிரதமர் நரேந்திர மோடி ஒட்டுக்கேட்பதாகவும் அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் ராகுல் காந்தி குற்றச்சாட்டை கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் மூலம் நடைபெற்ற “என்னிடம் கேளுங்கள்” நிகழ்ச்சியின்போது ராகுல் காந்தி கூறியதாவது: எனது கையில் உள்ள இந்த போனில் உள்ள தகவல்கள் அனைத்தும் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. அதற்கான அனைத்து ஆதாரங்களும் இந்தப் போனில் தான் உள்ளன; பிரதமர் மோடிக்கும் அது நன்றாகவே தெரியும், ஏனெனில் அவர்தான் என் போனை ஒட்டுக்கேட்கிறார்” என்றார்.
மேலும், பல்வேறு தேசியப் பிரச்சினைகள் குறித்து தம்முடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த பிரதமர் தயாரா என அவர் மீண்டும் சவால் விடுத்துள்ளார். இருப்பினும், இந்தத் தொலைபேசி ஒட்டுக்கேட்டல் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் எத்தகைய சரிபார்க்கக்கூடிய தொழில்நுட்ப ஆதாரங்களையும் அவர் வெளியிடவில்லை.
பெகாசஸ் குற்றச்சாட்டு
தமது மற்றும் பல அரசியல்வாதிகளின் தொலைபேசிகளில் ‘பெகாசஸ்’ மென்பொருள் மூலம் மத்திய உளவுத்துறை அமைப்புகள் ஒட்டுக்கேட்டதாக ராகுல் காந்தி கடந்த 2023-ம் ஆண்டிலும் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்தத் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.