

பெங்களூரு: பெங்களூருவில் நடைபெற்ற 7-வது உலக திருக்குறள் மாநாட்டில், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெங்களூருவில் உள்ள செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 7-வது உலக திருக்குறள் மாநாடு நடைபெற்றது. செயின்ட் ஜோசப் பல்கலைக் கழகத்துடன் திருவள்ளுவர் சங்கம் இணைந்து நடத்திய இந்த மாநாடு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 7 மணிவரை நடைபெற்றது.
திருவள்ளுவர் சங்கத் தலைவர் எஸ்.டி.குமார் தலைமையில் நடந்த இம்மாநாட்டில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, பல்கலை கழகத்தின் இணைவேந்தர் கிறிஸ்டோ செல்வன், இந்திய மொழிகள் துறை தலைவர் அருள்மணி, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன், ஸ்ரீநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில், “திருக்குறள் உணர்த்தும் உலக அமைதியும் மாந்தநேய மாண்புகளும்" என்ற தலைப்பிலான நூலை மயில்சாமி அண்ணாதுரை வெளியிட எஸ்.டி.குமார் பெற்றுக்கொண்டார். இதையடுத்து 60-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் திருக்குறள் தொடர்பான தங்களின் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
திருக்குறளை வாசிப்பது வரம்:
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில், ''திருக்குறள் தமிழ் மொழியின் தமிழர்களின் மிகவும் பெருமைக்குரிய நூல். இதனை கற்பதற்காக மகாத்மா காந்தி தமிழை எழுத படிக்க கற்க முயற்சித்தார். தமிழர்கள் தங்களின் தாய்மொழியிலே இந்த நூலை வாசிக்க வாய்ப்பு பெற்றிருப்பது மிகப்பெரிய வரமாகும்.
இன்றைய இளைய தலைமுறையினர் திருக்குறளை தினந்தோறும் தவறாது படிக்க வேண்டும். உலகப் பொதுமறையாக கொண்டாடப்படும் இந்த நூலை இளைஞர்கள் தங்களின் வாழ்க்கை வழிகாட்டியாக கைக்கொள்ள வேண்டும்.
திருக்குறளை வாசித்தால் வன்முறை இல்லாத, சமத்துவ சமுதாயம் உருவாகும். பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்ட வடிவமைப்பு குழுவின் தலைவராக, தமிழக அரசு என்னை நியமித்துள்ளது. அந்த பொறுப்பின் மூலம் திருக்குறளை மாணவர்களிடம் கொண்டு செல்ல முயற்சிப்பேன்''என்றார்.
தமிழ் இருக்கை வேண்டும்:
மாநாட்டின் ஏற்பாட்டாளர் எஸ்.டி.குமார் பேசுகையில், ''இந்த மாநாட்டுக்கு ஆயிரக்கணக்கானோர் குடும்பத்தோடு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கர்நாடகாவில் தமிழ் மொழி பயில்வது குறைந்துவிட்ட சூழலில் இத்தனை பேர் இங்கு குவிந்திருப்பது தமிழின் மீதான பற்றை காட்டுகிறது.
கர்நாடகாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்க வேண்டும். செயிண்ட் ஜோசப் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நிர்வாகத்தினருடன் பேசி வருகிறேன். அவ்வாறு இருக்கை அமைத்தால் நானே ரூ.10 லட்சம் தருவேன்''என்றார்.
இம்மாநாட்டில் மத்திய அரசு திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் எனவும், கல்வி நிலையங்களில் கட்டாயம் திருக்குறளை கற்பிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆச்சர்யமான ஆய்வுரை:
திருச்சியை சேர்ந்த மூளை நரம்பியல் மருத்துவர் எம்.ஏ.அலீம், திருக்குறளில் இடம்பெற்றுள்ள குறிப்பறிதல் அதிகாரத்தில் வெளிப்பட்டுள்ள முக பாவனைகள் எவ்வாறு மூளை நரம்பியலோடு தொடர்புடையதாக அமைந்திருக்கிறது என்பது குறித்து ஆய்வுரை நிகழ்த்தினார்.
அவரைத் தொடர்ந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளையும், வெளிமாநிலங்களையும் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் திருக்குறள் குறித்த ஆய்வுரைகளை வழங்கினர்.