“பாஜக அரசை அகற்றும் நேரம் வந்துவிட்டது” - ராகுல் காந்தி

தர்மேந்திர பிரதான் ராஜினாமா பற்றி கருத்து
“பாஜக அரசை அகற்றும் நேரம் வந்துவிட்டது” - ராகுல் காந்தி
Updated on
2 min read

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், “தர்மேந்திர பிரதானின் ராஜினாமா நமது கல்வி முறையைச் சீரமைப்பதற்கான ஒரு மிக முக்கிய நடவடிக்கையாகும்.

நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்குப் பாராட்டுக்கள். உங்கள் அனைவரையும் நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம். தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் உறுதியாக நின்ற ஒவ்வொரு இளைஞருக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் தங்கள் எதிர்காலம் ஆகியவற்றைப் பாதுகாக்க வீதிக்கு வந்து உறுதியாக நின்ற ஒவ்வொரு மாணவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

இன்னும் இரண்டு கோரிக்கைகள் எஞ்சியுள்ளன. மாணவர்களை மதித்து பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், மாணவர்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நாட்டின் விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழைகள் உள்பட இந்த அரசாங்கத்தால் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட ஒவ்வொருவரும் தங்கள் கண்ணியத்துக்காக அரசியலமைப்புக்கு உட்பட்ட முறையில் போராட முன்வர வேண்டும்.

இந்த அரசாங்கத்தை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. அஞ்சாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் வயநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, “பல காரணங்களுக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். முக்கியமாக, அரசிலமைப்பைச் சிதைக்க முயன்றவர்களிடமிருந்தும், மக்களின் குரலை ஒடுக்கவும் நசுக்கவும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டவர்களிடம் இருந்தும் நம் நாட்டு மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெற தொடங்கிய நாள் இது என்று நான் நம்புகிறேன்.

இது இந்திய இளைஞர்களின் வெற்றி. தாங்கள் நம்பிய கொள்கைகளுக்காக வெளியே வந்து உறுதியாக நின்றவர்கள் அவர்கள். மகாத்மா காந்தி நமக்கு கொடுத்த அதே வழியில் வன்முறையற்ற முறையில் அவர்கள் இதைச் செய்தார்கள்.

அவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது, கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன, தடியடி நடத்தப்பட்டது. ஆனாலும் அவர்கள் ஒருபோதும் பணியவில்லை. மாறாக, அரசாங்கமே அவர்களின் விருப்பத்துக்கு பணிய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இது நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்கால ஆட்சியாளர்கள் அனைவருக்கும் ஒரு பாடம். மக்களின் விருப்பத்துக்கு நீங்கள் செவிசாய்க்க வேண்டும். இது ஒரு ஜனநாயகம். இங்கு மக்களின் விருப்பமே உயர்ந்தது. அதைவிட மேலானது எதுவும் இல்லை.

எந்தவொரு தனிமனிதரோ, தலைவரோ, சக்தியோ இந்திய மக்களின் விருப்பங்களை தடுத்து நிறுத்த முடியாது. இன்று இதை மாணவர்களும் இளைஞர்களும் நிரூபித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியாகிய நாங்கள் அவர்களுக்கு வலுவான முறையில் ஆதரவளிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறை சீர்திருத்தங்கள் குறித்து ராகுல் காந்தி நீண்ட காலமாக பேசி வருகிறார். அவரை பாராட்ட விரும்புகிறேன்.

ஏனெனில், இந்த பிரச்சினையை அவர் எழுப்பியதன் மூலம், மாணவர்களுக்கு ஆதரவளிப்பது மட்டுமல்லாது, நாடு முழுவதும் ஒரு இயக்கத்தை உருவாக்கக் கட்சியினர், மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் ஆகியோரை அவர் ஊக்குவித்தார். இது ஒரு தொடக்கம் மட்டுமே என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

“பாஜக அரசை அகற்றும் நேரம் வந்துவிட்டது” - ராகுல் காந்தி
“நாம் சாதித்துவிட்டோம்...” - சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே உற்சாகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in