

உத்தரகாசி: உத்தராகண்ட் மாநிலம் கங்கோத்ரி தேசியப் பூங்கா எல்லைக்குட்பட்ட புகழ்பெற்ற கேதார்தால் பகுதியில் மலையேற்றம் சென்ற 8 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி 3-வது நாளாக நடைபெற்று வருகிறது.
கடந்த அக்டோபர் 27-ம் தேதி, 8 மலையேற்ற வீரர்கள் உள்ளிட்ட 13 பேர் குழு, உத்தராகண்டின் கேதார்தால் நோக்கிய 3 நாள் பயணத்தைத் தொடங்கியது. அக்குழு புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அக்டோபர் 29-ம் தேதி மோசமான வானிலை நிலவும் என எச்சரிக்கை வந்தது. ஆனால், அதற்குள் மலையேற்றக் குழுவினர் தொடர்பற்ற தொலைதூரப் பகுதிக்குச் சென்றுவிட்டதால் அதிகாரிகளால் அவர்களை எச்சரிக்க முடியவில்லை.
திட்டமிட்டபடி 29-ம் தேதி திரும்ப வேண்டிய இக்குழுவினர், 12 இடங்களில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாகப் பாதியிலேயே முடங்கினர். அக்டோபர் 31 அன்று கச்சிடாங் அருகே பனியை விலக்கி பாதை அமைத்த மீட்புக்குழுவினர், 5 பேரை பத்திரமாக மீட்டு கங்கோத்ரிக்கு அழைத்து வந்தனர். எஞ்சிய 8 பேர் மாயமாகியுள்ளனர்.
இந்நிலையில், மாநில பேரிடர் மீட்புப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, நேரு மலையேற்றப் பயிற்சி நிறுவனத்தின் 4 வல்லுநர்கள், 5 மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் பனிச்சரிவு பகுதியில் இறங்கி தரைவழித் தேடலைத் தொடங்கினர். ஆனால், இதுவரை அவர்களின் கூடாரங்களோ, அவசர உதவி சிக்னல்களோ தென்படவில்லை என எஸ்டிஆர்எப் கமாண்டன்ட் அர்பன் யதுவன்ஷி தெரிவித்துள்ளார்.