சசி தரூர்

சசி தரூர்

‘‘காங்கிரஸுடன் கொள்கை ரீதியாக முரண்பட்ட ஒரே விஷயம் ஆபரேஷன் சிந்தூர் மட்டுமே’’ - சசி தரூர்

Published on

கோழிக்கோடு: நாடாளுமன்றத்தில் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடுகளை தான் ஒருபோதும் மீறியதில்லை என்றும், கட்சியுடன் கொள்கை ரீதியாக தான் முரண்பட்ட ஒரே விஷயம் ஆரேஷன் சிந்தூர் மட்டுமே என்றும் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத தாக்குதலை அடுத்து மத்திய அரசு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையை எடுத்தது. அதில், பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு முழு அளவில் சசி தரூர் ஆதரவு தெரிவித்து வந்தார். மேலும், இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய வெளிநாடுகளுக்கு எடுத்துக்கூறும் தூதுக்குழுவுக்கு தலைமையேற்று சசி தரூர் செயல்பட்டார்.

இதையடுத்து, சசி தரூர் மீது காங்கிரஸ் தலைமை அதிருப்தி அடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகின. கேரளாவிலும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் அவரை ஓரம் கட்ட முயல்வதாகக் கூறப்படுகிறது. இதனால், சசி தரூரும் அதிருப்தி அடைந்து இருப்பதாகவும் அவர் பாஜகவில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கோழிக்கோட்டில் நடைபெற்ற கேரள இலக்கிய விழாவின் ஒரு அமர்வில், கேள்விகளுக்கு சசி தரூர் பதில் அளித்தார். சசி தரூருக்கு எதிராக வெளியாகி வரும் செய்திகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சசி தரூர், ‘‘பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஒரு பார்வையாளராக, ஒரு எழுத்தாளராக ஒரு செய்தித்தாளில் நான் ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அதில், ‘பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னணியில் இருக்கும் பாகிஸ்தான் தண்டிக்கப்படாமல் இருந்துவிடக்கூடாது.

பாகிஸ்தானுக்கு எதிராக துரித நடவடிக்கையை இந்திய அரசு எடுக்க வேண்டும். அதேநேரத்தில், இந்தியா வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருவதால், பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை என்பது நீண்டகால மோதலாக மாறிவிடக்கூடாது. அது, பயங்கரவாத முகாம்களை குறிவைப்பதோடு மட்டுப்படுத்தப்பட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தேன்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், நான் பரிந்துரைத்தபடியே இந்திய அரசாங்கத்தின் செயல்பாடுகள் இருந்தன.

ஜவஹர்லால் நேரு எழுப்பிய ஒரு புகழ்பெற்ற கேள்வி இருக்கிறது. இந்தியா இறந்தால் யார் வாழ்வார்கள் என்பதுதான் அந்த கேள்வி.

இந்தியா ஆபத்தில் இருக்கும்போது, இந்தியாவின் பாதுகாப்பும், உலகில் அதன் இடமும் தொடர்புபடுத்தப்படும்போது, இந்தியாவே முதலிடம் பெறுகிறது. ஒரு சிறந்த இந்தியாவை உருவாக்கும் செயல்முறையில் அரசியல் கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், தேசிய நலன்கள் என்று வரும்போது இந்தியாவே வெற்றிபெற வேண்டும்’’ என தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>சசி தரூர்</p></div>
“அதிகார வெறிபிடித்த சதிகாரர் முகம்மது யூனுஸ்” - ஷேக் ஹசீனா கடும் தாக்கு!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in