

புதுடெல்லி: “போர் தொடங்கும் முன் ஈரானில் உள்ள இந்தியர்களை எச்சரித்தபோதே எரிவாயு தட்டுப்பாட்டுக்கான ஆபத்து குறித்தும் அரசு தெளிவுபடுத்தி இருக்க வேண்டும். அதோடு, இதை எதிர்கொள்ள அப்போதே நாம் தயாராகி இருந்திருக்க வேண்டும்” என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்.28-ம் தேதி தாக்குதல்களைத் தொடங்கின. ஆனால், ஜன.5-ம் தேதி முதலே ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு, தூதரகம் மூலம் மத்திய அரசு தொடர் அறிவுறுத்தல்களை வழங்கி வந்தது. பிப்.23-ம் தேதி ஈரானில் உள்ள இந்திய தூதரகம் விடுத்த அறுவுறுத்தலை அடுத்து ஏராளமான இந்தியர்கள் அந்நாட்டில் இருந்து தாயகம் திரும்பினர். எனினும், போர் தொடங்கினால் எரிபொருள் பிரச்சினை ஏற்படும் என்பது தொடர்பாக மத்திய அரசு எவ்வித அறிவுறுத்தலையும் வழங்கவில்லை.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதல்களால் நமது நாட்டில் ஏற்பட்டுள்ள எல்பிஜி நெருக்கடி குறித்து சபையின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். எல்பிஜி நெருக்கடி நாடு முழுவதும் பரவலான துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், சாதாரண குடும்பங்கள், உணவகங்கள், விடுதிகள், வணிக பயனர்கள் ஆகியோரை இது கடுமையாக பாதித்துள்ளது.
இந்தியா அதன் மொத்த எல்பிஜி தேவையில் தோராயமாக 60% இறக்குமதி செய்கிறது. இந்த இறக்குமதிகளில் 90% ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகின்றது. இதன் காரணமாக, தற்போதைய சூழ்நிலையில் உள்நாட்டில் எல்பிஜி கிடைப்பதிலும், அவற்றின் விலையிலும் கடுமையான கவலை ஏற்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் இது பாதிக்கிறது. மக்கள் தங்கள் வீடுகளில் கஷ்டப்படுகிறார்கள். சிறிய உணவகங்கள், ஹோட்டல்கள், விடுதிகள் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகள் மட்டுமல்ல, MSME-கள் மற்றும் பிற வணிக பயனர்கள் எல்பிஜி சிலிண்டர்களைப் பெறுவதில் அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
பல நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை குறைத்துக்கொண்டுள்ளன அல்லது நிறுத்திவிட்டன. சிலர், ஒரு சிலிண்டரை ரூ.5,000-க்கும் அதிகமாக விலை கொடுத்தும் வாங்குகிறார்கள்.
நமது பெட்ரோலிய அமைச்சர் மக்களவையில் எல்பிஜி பற்றாக்குறை இல்லை என்று கூறினார். வதந்திகளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆனால், கள யதார்த்தங்கள் அரசாங்கத்தின் கூற்றுக்களை பொய்யாக்குகின்றன.
நிலைமை மோசமடையக்கூடும் என்று ஈரானில் உள்ள இந்திய குடிமக்களை எச்சரித்தபோதே, இது முக்கியமான கடல் வழிகள் மற்றும் எரிசக்தி விநியோகங்களை பாதிக்கக்கூடும் என்பதையும் அரசாங்கம் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அதற்கேற்ப நாம் தயாராக இருந்திருக்க வேண்டும்.
நாடு முழுவதும் சிலிண்டர் முன்பதிவுகளுக்கான காத்திருப்பு காலம் நகரங்களில் 25 நாட்களாகவும், கிராமங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் 45 நாட்களாகவும் நீட்டிக்கப்பட்டது. இது, மக்கள் பீதி அடைவதற்கு வழிவகுத்தது. அதன் காரணமாகவே பலர் முன்கூட்டியே முன்பதிவு செய்யத் தொடங்கினர். அதோடு, இது பதுக்கி வைக்கப்படுவதற்கான வாய்ப்பையும் அதிகரித்தது.
எல்பிஜி நெருக்கடி அதிகரிக்கும் என்று அரசாங்கம் அறிந்திருந்தால், அது ஏன் வலிமையான நடவடிக்கைகளை எடுத்து பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை? இந்த நெருக்கடி அரசாங்கத்தின் மோசமான மேலாண்மை மற்றும் மோசமான வெளியுறவுக் கொள்கையை அம்பலப்படுத்துகிறது.
இந்த பிரச்சினையில் அரசாங்கம் உடனடியாக, வலுவான நடவடிக்கைகளை எடுத்து, சிறு வணிகங்கள் உட்பட பொதுமக்களுக்கு மலிவு விலையில் சிலிண்டர்கள் கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று நான் கோருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.