

புதுடெல்லி: ஹமாஸ் பாணியில் மருத்துவமனைகளை ஆயுதங்களை பதுக்கி வைக்கும் இடமாக தீவிரவாத மருத்துவர்கள் பயன்படுத்தியது என்ஐஏ விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
காசாவில் உள்ள முக்கிய மருத்துவமனைகளுக்கு அடியில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி தாக்குதல் நடத்தி வந்ததை இஸ்ரேல் படை கண்டுபிடித்து அழித்தது. அதேபோன்ற ஹமாஸ் பாணியை பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பும் கடைபிடித்துள்ளது.
அந்த அமைப்புடன் தொடர்புடைய 10 இந்திய மருத்துவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட லாக்கரில் வெடிபொருட்கள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பதுக்கி வைக்க பயன்படுத்தியுள்ளது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த நவம்பர் 10-ம் தேதி டெல்லியில் கார்குண்டு தற்கொலை தாக்குதல் தொடர்பாக முகமது ஷகீல், அதில் அகமது ரதீர், ஷாகின் சயீத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதில், ஷகீல் மற்றும் முகமது அல் பலா மருத்துவமனையில் மருத்துவர்களாக பணியாற்றி வந்தனர். ரதீர் ஜம்மு காஷ்மீரில் அனந்நாக்கில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றி வந்தார்.
அம்மாநில போலீஸார் அந்த கல்லூரியில் நடத்திய சோதனையில் ரதீர் லாக்கரில் இருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதேபோன்று ஷாகின் சயீது காரில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கிடைத்தன.
பொதுவாக நோயாளிகள் சிகிச்சைபெறும் இடம் என்பதால் மருத்துவமனைகளில் யாருக்கும் சந்தேகம் வராது. சோதனையும் இடமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் ஆயுதங்களை அங்கு அவர்கள் பதுக்கியுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.