

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் ‘கள்’ விற்க நடவடிக்கை எடுப்போம் என தெலங்கானா மாநில அமைச்சர் பொன்னம் பிரபாகர் அறிவித்துள்ளார்.
தெலங்கானா மாநில போக்குவரத்து மற்றும் பிசி நலச்சங்க துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் ஹைதராபாத்தில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: தெலங்கானா கலாச்சாரத்தை வெளி உலகிற்கு தெரியப்படுத்தும் வகையில், இனி ‘கள்’, நீரா (பதநீர்) போன்றவற்றின் விற்பனை ஊக்குவிக்கப்படும். இதற்கான தீவிர முயற்சியில் அரசு உள்ளது. தோட்டக்கலை பண்ணைகளில் கூட ஈச்சம், பனை கன்றுகள் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
ஹைதராபாத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல்களில் கூட ‘கள்’, நீரா போன்றவை விற்க நடவடிக்கை எடுக்கப்படும். கள் இறக்கும் கூலி தொழிலாளர்கள் நலனுக்காக இந்த அரசு பல திட்டங்களை செயல்படுத்தும். வரும் 24-ம் தேதி எக்ஸ்பீரியம் பார்க்கில் ‘பனை மேளா’ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு 250 வகையிலான பனை மரங்கள் நடப்பட்டுள்ளன. அவைகளை மக்கள் கண்டு ரசிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.