பிஹாரில் மெகா கூட்டணியின் சட்டமன்ற தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு

தேஜஸ்வி யாதவ் | கோப்புப் படம்

தேஜஸ்வி யாதவ் | கோப்புப் படம்

Updated on
1 min read

பாட்னா: பிஹாரில் மெகா கூட்டணியின் சட்டமன்றத் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு அணியாகவும், ராஷ்ட்ரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) தலைமையிலான மெகா கூட்டணி ஒரு அணியாகவும் களம் கண்டன. இந்த தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று வலிமையான பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

ஆர்ஜேடி தலைமையிலான கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில் ஆர்ஜேடி-25, காங்கிரஸ்-6, சிபிஐ(எம்எல்)-2, சிபிஎம்-1, ஐஐபி-1 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

இந்நிலையில், மெகா கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் பாட்னாவில் இன்று நடைபெற்றது. தேஜஸ்வி யாதவின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கூட்டணியின் சட்டமன்றத் தலைவராக தேஜஸ்வி யாதவ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே, ஆர்ஜேடியின் சட்டமன்றக் குழு தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆர்ஜேடி எம்எல்ஏ பாய் வீரேந்திரா, "மெகா கூட்டணியின் சட்டமன்றத் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எங்கள் கட்சியின் சட்டமன்றத் தலைவராகவும் அவர் இருப்பார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு போதுமான எண்ணிக்கை பலம் உள்ளது. எனவே, அவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்பார்" என தெரிவித்தார்.

தேஜஸ்வி தேர்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் சமீர் குமார் சிங், "தேஜஸ்வி யாதவின் தேர்வு ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு. இன்றைய கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்ட விதம் குறித்து பலரும் கவலைகளைத் தெரிவித்தனர். தேர்தல் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவுமே நடந்தது. எனினும், பிஹாரில் முதன்முறையாக நடத்தப்பட்ட எஸ்ஐஆர் செயல்முறை இன்னமும் கேள்விக்குரியதாகவே உள்ளது.

மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை நாங்கள் சட்டமன்றத்தில் எழுப்புவோம். தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து ஆளும் கூட்டணி பின்வாங்குமானால் நாங்கள் அதற்கு எதிராக நிற்போம்" என தெரிவித்தார்.

தேர்தலுக்குப் பிறகான பிஹார் சட்டப்பேரவையின் முதல் கூட்டம் வரும் திங்கள் கிழமை கூட உள்ளது. இதில், அனைத்து உறுப்பினர்களும் பதவியேற்க உள்ளனர். இந்த கூட்டம் 5 நாட்கள் நடைபெற உள்ளது.

<div class="paragraphs"><p>தேஜஸ்வி யாதவ் | கோப்புப் படம்</p></div>
மத்திய அரசின் உத்தரவால் ‘லோக் பவன்’ ஆக மாறியது மேற்கு வங்க ராஜ் பவன்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in