

புதுடெல்லி: தொழில்நுட்பம்தான் நம்முடைய எதிர்கால சொத்து என்று கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்வி மையத்தில் (என்டிஏ) பயின்ற 329 வீரர்களுக்கு பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி, கேத்ரபால் மைதானத்தில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பங்கேற்ற கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி பேரணியை பார்வையிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:
அடுத்த தலைமுறை ராணுவ அதிகாரிகளான உங்களை ஒழுக்கமானவர்களாகவும், உறுதியானவர்களாகவும், இந்தியாவின் அமைதி, பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாப்பவர்களாகவும் பார்க்கிறேன். போர் முறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், தொழில்நுட்பம் எண்ணங்களின் வேகத்தை மாற்றுகிறது. எதிர்காலத்தில் தொழில்நுட்பம் நம்முடைய மிகப்பெரிய சொத்தாக இருக்கும்.
நமது பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல, அமைதிக்கான பாதை சக்தியின் வழியாகவே செல்கிறது. இன்றைய அணிவகுப்பு இந்த கல்வி மையத்தின் முன்மாதிரியான தரத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.