புதுடெல்லி: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக முதலைக் கண்ணீர் சிந்துவதாக மக்களவையில் பாஜக கடுமையாக குற்றம் சாட்டியது.
சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் நோக்கில் நாடாளுமன்ற சிறப்பு அமர்வு இன்று தொடங்கியது. மூன்று நாட்களுக்கு இந்த அமர்வு நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது.
சிறப்பு அமர்வின் முதல் நாளான இன்று, அரசியல் சாசன திருத்தம் (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 ஆகிய மூன்று மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.
அரசியலமைப்புத் திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா ஆகிய இரண்டு மசோதாக்களை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். யூனியன் பிரதேசங்களுக்கான சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.
மசோதாக்களை தாக்கல் செய்து பேசிய அர்ஜுன் ராம் மேக்வால், “மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தங்களுக்கான பிரதிநிதித்துவம் குறையும் என்று சில மாநிலங்கள் அச்சம் தெரிவிக்கின்றன. ஆனால், அத்தகைய அச்சம் தேவையற்றது.
ஏனெனில், நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் அனைத்து மாநிலங்களுக்கும் 50% எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதனால், மக்களவையின் மொத்த இடங்கள் 815 ஆக அதிகரிக்கும். இதில், 272 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். இதனால், எந்த மாநிலத்துக்கும் எந்த இழப்பும் ஏற்படாது. அனைத்து மாநிலங்களும் தற்போதைய நிலையிலேயே தங்கள் பலத்தை தக்க வைத்துக்கொள்ளும்” என கூறினார்.
தொடர்ந்து இந்த மசோதாக்கள் மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, “இந்த மசோதாக்கள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள், குறிப்பாக திமுக ஏன் இவ்வளவு கூச்சலிட வேண்டும்? அவர்கள் சிந்தும் கண்ணீர் முதலைக் கண்ணீர் மட்டுமே.
2026-ஆம் ஆண்டில் நாடு தொகுதி மறுவரையறைப் பணியை மேற்கொள்ளும்போது, பாஜக தலைமையிலான மத்திய அரசே அதனைச் செயல்படுத்தும் என்பதில் நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். காங்கிரஸ் அரசு ஆந்திரப் பிரதேசத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்தபோது, நாட்டைப் பிரித்தபோது ஆங்கிலேயர்கள் செய்ததை விட மோசமான முறையில் அவர்கள் செயல்பட்டனர்.
நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவன், கர்நாடகத்தைச் சேர்ந்தவன். கடந்த மூன்று நாட்களாக, தென்னிந்தியாவில் எதிர்க்கட்சிகள் மிகவும் அராஜகமான முறையில், திட்டமிட்டுத் தவறான தகவல்களைப் பரப்பிப் பிரச்சாரம் செய்வதை நாங்கள் கண்டு வருகிறோம். இன்று உண்மையிலேயே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். தேசியக் கொள்கைகளை வகுக்கும் செயல்முறையில் பங்கேற்பதற்கான தங்கள் உரிமைக்காக இந்தியப் பெண்கள் ஏறக்குறைய 40 ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். தற்போது அவர்கள் தங்களுக்குரிய உரிமையைப் பெற இருக்கிறார்கள்.
தற்போதும்கூட, பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவைச் செயல்படுத்துவதை மேலும் தாமதப்படுத்தவும், சீர்குலைக்கவும், எதிர்க்கவும் எதிர்க்கட்சிகள் ஒரு புதிய வாதத்தையும், புதிய சாக்குப்போக்கையும் முன்வைத்துள்ளன. அவர்கள் முன்வைத்துள்ள அந்தப் புதிய சாக்குப்போக்கு, தொகுதி மறுவரையறைப் பணிக்கு எதிராக அவர்கள் தெரிவிக்கும் வாதங்கள் அனைத்தும் அடிப்படை அற்ற எதிர்ப்பே ஆகும். தொகுதி மறுவரையறை என்பது மறைமுகமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயல்பாடு அல்ல. அரசியலமைப்புச் சட்டம் என்ன கட்டளையிடுகிறதோ, அதை மட்டுமே நாங்கள் முழுமையாகப் பின்பற்றுகிறோம்” என்று தெரிவித்தார்.