

சுந்தர்ராஜ் என்ஐஏ ஐஜி
புதுடெல்லி: இந்தியாவில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் இருந்த மாநிலம் சத்தீஸ்கர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் கடந்த மார்ச் 31ம் தேதியுடன் நக்சலைட்டுகள் இல்லா மாநிலமாக சத்தீஸ்கர் அறிவிக்கப்பட்டது. நக்சலைட்டுகள் பலர் கொல்லப்பட்டனர். சரணடைந்த பலருக்கு மறுவாழ்வுக்கான உதவிகள் செய்யப்பட்டுள்ளன.
சத்தீஸ்கரின் நக்சல் ஆதிக்கம் இருந்த பஸ்தர் காட்டு பகுதியில் 12 ஆண்டுகள் பணியாற்றிய மூத்த ஐபிஎஸ் அதிகாரி பி.சுந்தர்ராஜ். இவர் தமிழ்நாட்டின் கோவையைச் சேர்ந்தவர். கடந்த 2003-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலப் பிரிவில் தேர்ச்சிப் பெற்றவர். இவர் பஸ்தர் பகுதியில் நக்சல் பாதிப்புக்கு உள்ளான 7 மாவட்டங்களில் அடுத்தடுத்து பணியாற்றி உள்ளார். மத்திய பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து சுந்தர்ராஜ் சிறப்புடன் பணியாற்றினார்.
இவரது திறமையான செயல்பாடுகள், பாதுகாப்புப் படைகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியது போன்ற பல நடவடிக்கைகளுக்காக சுந்தர்ராஜ் பெரிதும் பாராட்டப்படுகிறார். நக்சலைட் ஒழிப்பில் இவரது பங்கு மிகப் பெரியதாக இருந்தது.
முன்னதாக நக்சலைட்டுகளை ஒடுக்கும் திறன் கொண்ட ஒரு காவல் படையை உருவாக்க 2005-ல் மத்திய அரசு முடிவு எடுத்தது. இதற்காக பஸ்தர் காடுகள் பகுதியில், ‘கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் காட்டுப் போர் முறைப் பயிற்சிப் பள்ளி’ அமைக்கப்பட்டது. இதில், மேம்பட்ட கமாண்டோ பயிற்சியை மேற்கொண்ட முதல் காவல் அதிகாரிகளில் சுந்தர்ராஜ் இடம்பெற்றார்.
ஐஜியான சுந்தர்ராஜின் திறமையை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, தற்போது தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) ஐ.ஜி.யாக பணி நியமனம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சுந்தர்ராஜை உடனடியாக பணியில் இருந்து விடுவிக்குமாறு சத்தீஸ்கர் அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.