தமிழக மாணவிக்கு பெங்களூருவில் பாலியல் வன்கொடுமை: கைதான 2 பேரிடம் விசாரணை

தமிழக மாணவிக்கு பெங்களூருவில் பாலியல் வன்கொடுமை: கைதான 2 பேரிடம் விசாரணை
Updated on
1 min read

பெங்களூரு: தமிழகத்தை சேர்ந்த 19 வயது மாணவி பெங்களூருவில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள திருப்பூரை சேர்ந்த 19 வயது பெண், பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் கடந்த 21-ம் தேதி அம்ருதஹள்ளி காவல் நிலைய‌த்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், ''கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டகிராம் மூலம் ராஜாஜிநகரை சேர்ந்த டிக்ஸன் சாண்டோ (21) என்பவர் அறிமுகமானார். நாங்கள் நண்பர்களாக பழகிவந்த நிலையில், கடந்த 14-ம் தேதி காதலர் தின இரவு விருந்துக்கு வருமாறு அழைத்தார். ஜக்கூரில் உள்ள பங்களாவுக்கு சென்ற போது அங்கு டிக்ஸன் சாண்டோவின் நண்பர் நிகில் (34) வந்திருந்தார்.

அங்கு இரவு விருந்தில் எனக்கு போதைப் பொருளில் மாத்திரை கலந்து கொடுத்தனர். அதில் சுயநினைவை இழந்த நிலையில் இருவரும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினர். மேலும் இதனை வெளியே சொன்னால், என்னோடு நெருக்கமாக இருந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டினர்.

இந்தச் சம்பவத்தால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டதால் கடந்த‌ 17-ம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இது தொடர்பாக எழுதியுள்ளேன். எனது அண்ணன் அளித்த தைரியத்தின் அடிப்படையில் போலீஸை நாட முடிவெடுத்தேன்” என கூறியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் அம்ருதஹள்ளி போலீஸார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து டிக்ஸன் சாண்டோ, நிகில் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

பதில் புகார்:

இந்நிலையில் நிகில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக பதில் புகார் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “சம்பந்தப்பட்ட பெண் பணத்துக்காக என்னோடு பழகினார். பிப்ரவரி 14-ம் தேதி இரவு விருந்தின்போது, நல்ல 'சுகர் டாடி'யை தேடுவதாக கூறினார். அந்த விருந்து முடிந்து அவரை எனது காரிலே அவரது வீட்டில் இறக்கி விட்டேன்.

கடந்த 19-ம் தேதி தனியார் சேனலில் பணியாற்றும் ஒரு நபர் என்னை தொடர்புக்கொண்டு, 'அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ கிடைத்திருக்கிறது. அதனை செய்தியாக ஒளிபரப்பினால் சிறைக்கு செல்ல நேரிடும். ஒளிபரப்பாமல் இருக்க ரூ.10 லட்சம் தர வேண்டும்' என மிரட்டினார்.

அதனை மறுத்ததால், இந்த பெண் என் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.

பெங்களூரு போலீஸார் இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்

தமிழக மாணவிக்கு பெங்களூருவில் பாலியல் வன்கொடுமை: கைதான 2 பேரிடம் விசாரணை
‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 கருணைத் தொகை’ - அதிமுக 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் பழனிசாமி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in