

புதுடெல்லி: காவிரியில் தமிழகத்துக்கு விகிதாச்சாரப்படி கிடைக்க வேண்டிய நீரை உடனடியாகத் திறக்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தி உள்ளது.
காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு தாக்கல் செய்த நிலை அறிக்கையுடன் கூடிய பிரமாணப் பத்திரத்தில் கூறியிருப்பதாவது: கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், தமிழகத்தின் பற்றாக்குறையை ஈடுகட்ட விகிதாச்சாரப்படி விநாடிக்கு 22,000 கன அடி நீரை அடுத்த 15 நாட்களுக்குத் திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆனால், ஆணையம் 15 நாட்களுக்கு விநாடிக்கு 9,000 கன அடி நீர் மட்டுமே திறக்க உத்தரவிட்டது. வறட்சிக் காலங்களில் விகிதாச்சாரப்படி நீர் திறக்க வேண்டும் என்ற விதியை ஆணையம் பின் பற்றவில்லை. கடந்த 27-ம் தேதி நிலவரப்படி கர்நாடக அணைகளில் 72.961 டிஎம்சி நீர் இருந்தும், விகிதாச்சாரப்படி தமிழகத்துக்குரிய நீரைத் திறக்க ஆணையம் உத்தரவிடவில்லை.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஜூன் மாதம் முதல் இதுவரை தமிழகத்துக்கு 80.451 டிஎம்சி நீர் கிடைத்திருக்க வேண்டும். வறட்சியைக் கருத்தில் கொண்டு கணக்கிட்டாலும் 43.202 டிஎம்சி நீர் கிடைக்க வேண்டும். ஆனால், இதுவரை 25.598 டிஎம்சி நீர் மட்டுமே கிடைத்துள்ளது. நீர் பற்றாக்குறை இருந்தும், கள நிலவரத்தைக் கருத்தில் கொள்ளாமல் ஆணையம் பிறப்பித்த 9,000 கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என்ற உத்தரவைக்கூட கர்நாடகம் முழுமையாகச் செயல்படுத்தவில்லை.
இதனால் காவிரி டெல்டா விவசாயிகளின் குறுவைச் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்துக்கு விகிதாச்சாரப்படி கிடைக்க வேண்டிய நீரைத் திறக்க உரிய உத்தரவு பிறப்பிக்குமாறும், குறிப்பாக பற்றாக்குறையான 17.604 டிஎம்சி நீரை உடனடியாகத் திறக்குமாறும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில் காவிரி நீர் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்திப் மேத்தா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.