

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நேற்று காலை பதவியேற்றுக் கொண்டார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர்.கவாய் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்வுபெற்றார். இந்நிலையில் நேற்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சூர்யகாந்த் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்வு பதவியேற்பு பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
6 நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள்: அரசியலமைப்பை காப்பேன் என்றும், கடமைகளை உண்மையாக நிறைவேற்றுவேன் என்றும் இந்தியில் கூறி சூர்யகாந்த் பதவியேற்றார். இதையடுத்து, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர், டெல்லி துணைநிலை ஆளுநர், டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஆகியோர் பங்கேற்றனர். மேலும் மலேசியா, இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் பங்கேற்றனர்.
தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள சூர்ய காந்த், அடுத்த 15 மாதங்கள் அந்தப் பதவியில் நீடிப்பார். 2027-ம் ஆண்டு, பிப்ரவரி 9-ம் தேதி தனது 65 வயது நிறைவடையும்போது அவர் ஓய்வுபெறவுள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கம், பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம், பெகாசஸ் உளவு மென்பொருள் வழக்கு உள்ளிட்ட பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கிய அமர்வுகளில் நீதிபதி சூர்யகாந்த் இடம்பெற்றிருந்தார்.
ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் கடந்த 1962-ம் ஆண்டு, பிப்ரவரி 10-ம் தேதி பிறந்த நீதிபதி சூர்ய காந்த், ஒரு சிறு நகரத்தில் வழக்கறிஞராக இருந்து நாட்டின் உயரிய நீதித்துறைப் பதவியை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் முதலில் பணியாற்றிய நீதிபதி சூர்யகாந்த், இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2018, அக்டோபரில் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, உச்ச நீதிமன்ற நீதிபதியாக 2019, மே மாதம் பதவியேற்றார்.
நினைத்துப் பார்த்ததில்லை... உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள சூர்யகாந்த் தனது சொந்த கிராமத்திலுள்ள வீட்டில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நான் ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தின் பெட்வார் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தேன். 6 அடி அகலம், 8 அடி நீளமுள்ள இந்த அறைதான் என்னுடைய படிப்பறை. இதில் என்னுடைய நண்பர்கள் 3 பேருடன் படித்தேன். எங்களுடைய ஆங்கில ஆசிரியர் பிரேம் சிங்கை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். இரவு நேரங்களில் வீட்டிலிருந்து பள்ளிக்கு வந்து படிக்குமாறு கூறினார். இதையடுத்து இரவு நேர உணவை எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்று பாடங்களை பயில்வோம்.
எங்கள் கிராமத்தில் சரியான மின்சார வசதி கிடையாது. அப்படியே மின்சாரம் வந்தாலும் குறைந்த அழுத்த மின்சாரமே கிடைக்கும். இதன்மூலம் கிடைக்கும் வெளிச்சம் போதுமானதாக இருக்காது. இதையடுத்து விளக்கின் துணை மூலம் படிப்போம்.
சிறுவயதில் நீதித்துறை அல்லது நீதிபதி என்றாலே என்னவென்று தெரியாது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் ஒரு நாள் அமர்வேன் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை.
பள்ளிப்படிப்பை முடித்ததும் உயர்கல்வியாக எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் இருந்தது. என்னுடைய சகோதரர்கள் பல்வேறு யோசனைகளைக் கூறினர். பலரிடம் ஆலோசனை செய்த பின்னர் சட்டம் படிக்க முடிவு செய்தேன். நான் இந்த நிலைக்கு உயர்ந்ததற்கு எனது பெற்றோர், ஆசிரியர்கள், ஊர் பெரியவர்களின் ஆசிதான் காரணம். எனது பதவிக் காலத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன். நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தேங்கி உள்ளன. இந்த எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.