

பிரதிநிதித்துவப் படம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள மதுர தாஸ்மாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சம்பா தேவி (66) என்ற பெண் தனது காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற வந்தார். அவரை பரிசோதித்த போது இரு காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. வலது காலில் அறுவை சிகிச்சை செய்ய தீர்மானிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 27-ம் தேதி சம்பா தேவிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் எலும்பியல் நிபுணர் ராமகிருஷ்ணன் சவுத்ரி, வலது காலுக்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அறுவை சிகிச்சைக்குப் பின்பே இது தெரியவந்தது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சிறப்புக் குழு அமைத்து விசாரணை நடத்தியது. அறுவை சிகிச்சையின்போது பின்பற்றப்படும் நிலையான செயல்பாட்டு விதிமுறைகளை (எஸ்ஓபி) பின்பற்றாமல், கவனக்குறைவாக தவறான காலில் அறுவை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, மருத்துவர் ராமகிருஷ்ணன் சவுத்ரி பணியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டு, மருத்துவக் கல்வித் துறைக்கு மாற்றப்பட்டார்.