தமிழக அரசின் பல்கலை. மசோதாவுக்கு ஐகோர்ட் விதித்த தடையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

மாநில பல்கலை.களில் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் விவகாரம்
தமிழக அரசின் பல்கலை. மசோதாவுக்கு ஐகோர்ட் விதித்த தடையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
Updated on
2 min read

புதுடெல்லி: மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்குவதற்காக தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 10 சட்டத் திருத்தங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்புக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

பல்கலைக்கழக துணை வேந்தர்களை முதல்வரே நியமனம் செய்யும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் 10 சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சட்டத் திருத்தங்களுக்கு கடந்த ஆண்டு மே மாதம் தடை விதித்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, விபுல் பஞ்சோலி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

சட்டத் திருத்தங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் தாமா சேஷாத்ரி நாயுடு ஆஜரானார். தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, பி. வில்சன் ஆகியோர் ஆஜராகினர்.

அப்போது, சட்டத் திருத்தங்களுக்கு எதிராக தொடரப்பட்ட மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து விசாரிக்காமல், தாக்கல் செய்யப்பட்ட 5 நாட்களில் ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்றது சரியா என்று தாமா சேஷாத்ரி நாயுடுவிடம் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், வழக்கை மறுக்க மாநில அரசுக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்பட்டதா என்றும் நீதிபதி கேட்டார்.

அதற்கு மாநில அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், ‘‘இந்த வழக்கு ஒரு விடுமுறைக்கால அமர்வு முன் விசாரிக்கப்பட்டது. நாங்கள் எங்கள் பதில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை. எங்கள் தரப்பு வாதங்களை கேளுங்கள் என்று நாங்கள் வாதிட்டோம். ஆனால், நீதிபதி மைக்கை ஆஃப் செய்துவிட்டு உத்தரவை பிறப்பித்துவிட்டார். மேலும், என் மீதும் சில கருத்துக்களைத் தெரிவித்தார். வழக்கு விசாரிக்கப்பட்ட விதம் கேள்விப்படாத ஒன்று, மிகவும் நியாயமற்றது’’ என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட தாமா சேஷாத்ரி நாயுடு, நீதிமன்றத்தின் மீது உள்நோக்கம் கற்பிப்பது நெறிமுறைக்கு எதிரானது என குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜாய்மால்யா பக்ஷி, ‘‘இந்த மனு ஏன் விடுமுறைக்கால அமர்வில் எடுத்துக்கொள்ளப்பட்டது? இது விடுமுறை காலத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இது ஏற்கெனவே நிலுவையில் இருந்த வழக்கு. விடுமுறைக்கால அமர்வு ஒரு பல்கலைக்கழகச் சட்டத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியை முடிவு செய்கிறதா? நீதிமன்றம் இந்த வழக்கில் உத்தரவை பிறப்பிக்க ஏன் இவ்வளவு அவசரம் காட்டியது?’’ என கேள்வி எழுப்பினார்.

அதற்கு, மாநில அரசு துணை வேந்தர் நியமனங்களைச் செய்ய தயாராகி வந்ததால் இந்த வழக்கு அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது என்று தாமா சேஷாத்ரி நாயுடு தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி, ஏதேனும் சட்டவிரோத நியமனங்கள் செய்யப்பட்டிருந்தால் உயர் நீதிமன்றம் அதில் தலையிட்டிருக்கலாமே என கூறினார்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம், ‘‘சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு முன்பு மாநில அரசுக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கி இருக்க வேண்டும். இந்த ஒரு காரணத்துக்காகவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும்’’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவு வரும் வரை புதிய நியமனங்களை செய்யக் கூடாது என்றும் உத்தரவிட உச்ச நீதிமன்றம் தயாரானது. அப்போது, அவ்வாறு எந்த நியமனங்களையும் செய்ய மாநில அரசு விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை ஆறு வாரங்களுக்குள் முடிக்குமாறு உயர் நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தியது.

இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனினும், தற்போதைய தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, மார்ச் மாதம் ஓய்வு பெற இருப்பதால், இந்த வழக்கை வேறு பொருத்தமான அமர்வு முன்பு பட்டியலிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக அரசின் பல்கலை. மசோதாவுக்கு ஐகோர்ட் விதித்த தடையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
‘எங்களுக்கு எங்குமே நீதி கிடைப்பதில்லை’ - எஸ்ஐஆர் வழக்கில் உச்ச நீதிமன்றத்திடம் மம்தா முறையீடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in