தலைமை நீதிபதி குறித்த சர்ச்சைப் பதிவு - கேரள காங். நிர்வாகிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்

தலைமை நீதிபதி குறித்த சர்ச்சைப் பதிவு - கேரள காங். நிர்வாகிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்
Updated on: 
1 min read

புதுடெல்லி: தலைமை நீதிபதி சூர்யகாந்த் குறித்து வெளியிடப்பட்டு பின்னர் நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சமூக ஊடகப் பதிவு தொடர்பாக, கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், கடந்த அக்டோபர் 12-ம் தேதி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்தை குறிவைத்து பதிவு ஒன்று போடப்பட்டது. இது கடும் விமர்சனத்துக்கு உள்ளானதை அடுத்து அக்கட்சியினர் அந்தப் பதிவை நீக்கினர்.

பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்த கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சன்னி ஜோசப், ‘இந்தப் பதிவு குறித்து தலைமைக்குத் தெரியாது. இதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட நபர் தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நீதித் துறையின் நடுநிலையை தங்கள் கட்சி கேள்விக்குள்ளாக்கவில்லை’ என தெரிவித்திருந்தார்.

இந்தப் பதிவு தொடர்பாக வழக்கறிஞர் வினீத் ஜிண்டால், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார். பின்னர், இது ரிட் மனுவாக பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம் ப்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிக்கலாம். ஆனால், கருத்து சுதந்திரத்தைப் பயன்படுத்தி நீதித்துறையை அச்சுறுத்தவோ அல்லது நீதி நிர்வாகத்தில் தலையிடவோ கூடாது. நீதிமன்றத்தின் அதிகாரம் சட்டத்தின் ஆட்சியை அடிப்படையாகக் கொண்டது. நீதித் துறை காட்டும் நிதானத்தை பலவீனமாகக் கருதிவிட வேண்டாம்’ என அறிவுறுத்தினர். மேலும், கேரள பிரதேச காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவருக்கும் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்ட சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர், அந்தப் பதிவு நிர்வாகிகளின் அனுமதியின்றி வெளியிடப்பட்டதாகவும், பின்னர் அது நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், கட்சி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்த நீதிபதி அரவிந்த் குமார், இந்த மன்னிப்பு வெறும் எழுத்து வடிவில் உள்ளதா அல்லது மனப்பூர்வமானதா என்பதை நீதிமன்றம் ஆய்வு செய்யும் என்றார்.

இந்த விவகாரம் சிவில் நீதிமன்ற அவமதிப்பா அல்லது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பா என்பதை ஆய்வு செய்ய மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் தத்தார், சித்தார்த் அகர்வால் ஆகியோரை நியமிப்பதாகவும் அமர்வு அறிவித்தது. மேலும், அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணியின் உதவியையும் நீதிமன்றம் கோரியுள்ளது.

தலைமை நீதிபதி குறித்த சர்ச்சைப் பதிவு - கேரள காங். நிர்வாகிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற தவெக அரசு முன்வர வேண்டும்: இந்து முன்னணி

X