மருத்துவ மாணவர்களுக்கு கட்டாய கிராமப்புறப் பணி - நெறிமுறைகளை உருவாக்க உச்ச நீதிமன்றம் முடிவு

மருத்துவ மாணவர்களுக்கு கட்டாய கிராமப்புறப் பணி - நெறிமுறைகளை உருவாக்க உச்ச நீதிமன்றம் முடிவு
Updated on: 
1 min read

புதுடெல்லி: நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் கட்டாய கிராமப்புற சேவை புரிவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கப் போவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மருத்துவக் கவுன்சிலில் நிரந்தரப் பதிவு பெற வேண்டுமானால், மருத்துவ மாணவர்கள் ஓராண்டு காலம் கட்டாயப் பொது கிராமப்புறச் சேவையை நிறைவு செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் ஆரதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.

அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி ஆஜராகி, முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு சுழற்சி முறையில் கட்டாயப் பணி அவசியமாக உள்ளதாகவும், ஆனால் இளநிலை மருத்துவ படிப்பளவில் அது கட்டாயமாக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், சுகாதாரம் மாநிலப் பட்டியலில் உள்ளதால் மாநிலங்களே இது தொடர்பாக உத்தரவு பிறப்பிப்பதாக குறிப்பிட்டார்.

இதையடுத்து, நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் ஆஜராகி, அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21 மற்றும் அரசு நெறிமுறைக் கோட்பாடுகளின் அடிப்படையில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கலாம் என்று பரிந்துரைத்தார்.

இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் சுட்டிக் காட்டிய நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, “நாங்கள் விசாரிப்பது, இந்தியாவில் மருத்துவ சேவையின் எதிர்காலத்தைப் பாதிக்கும் காரணிகளை கண்டறிவதும், நாட்டின் நலனுக்காகவும், சுகாதார மேம்பாட்டுக்காகவும் கிராமப்புற சேவை அவசியமா, இல்லையா என்பதோடு, இதிலுள்ள அடிப்படைச் சிக்கலை தீர்ப்பதற்கும் தான்” என தெரிவித்தார்.

மேலும், சுகாதார உரிமை என்பது அடிப்படை உரிமை என்றும், அரசின் கடமை என்று பார்க்கும்போது, எதிர்காலத்தில் கிராமப்புறப் பகுதிகளுக்குத் தனியார் மருத்துவமனைகளே முக்கியக் களம் ஆகிவிடும் சூழல் உருவாகும். எனவே, மத்திய அரசு இதுகுறித்து கொள்கை ரீதியாகத் தெளிவாகச் சிந்திக்க வேண்டும் என்று நீதிபதி கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து நீதிபதிகள், அரசியலமைப்பு சட்டத் தேவைகளின் அடிப்படையில், மாநில அரசுகளுடனும் மருத்துவ ஆணையத்திடமும் கலந்தாலோசித்து இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

மருத்துவ மாணவர்களுக்கு கட்டாய கிராமப்புறப் பணி - நெறிமுறைகளை உருவாக்க உச்ச நீதிமன்றம் முடிவு
தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு: குறைந்த பட்சம் ரூ.50 ஆக நிர்ணயம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in