

சென்னை: நடப்பு கல்வியாண்டில் 3-வது மொழி கட்டாயம் என்பதிலிருந்து 6-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விலக்கு அளிக்கும்படி சிபிஎஸ்இ கல்வி வாரியத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிதாக மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்தியதால் பாடப் புத்தகம் இல்லாதது உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்களால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இதில், தொடர்புடைய மாநில மொழி, ஆங்கிலம், மற்றும் ஏதாவது ஓர் இந்திய மொழி ஆகிய மூன்று மொழிகள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும் என தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.
தேசிய கல்விக் கொள்கையின் இந்த அறிவிப்புக்கு இணங்க, நடப்பு கல்வி ஆண்டு முதலே 6-ம் வகுப்பில் இருந்து மும்மொழி கொள்கை பின்பற்றப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்தது. அடுத்த கல்வி ஆண்டில் 7-ம் வகுப்பு வரையிலும், அதற்கு அடுத்த கல்வி ஆண்டில் 8-ம் வகுப்பு வரையிலும் என படிப்படியாக மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்தது.
சிபிஎஸ்இ-யின் மும்மொழி கொள்கையை எதிர்த்து பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. அவை, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (செப்.28) விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். அப்போது அவர், ”நடப்பு கல்வியாண்டில் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பதில் பின்வாங்க மாட்டோம். நாடு முழுவதும் 28,819 சிபிஎஸ்இ பள்ளிகளில் 1.2 சதவீதம் பள்ளிகளை தவிர மற்றவை மும்மொழி கொள்கையை செயல்படுத்த தயாராகவே இருக்கின்றன” என்றார்.
இப்போது 7,8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழியைப் பயின்றால், அவர்கள் 10-ம் வகுப்பு செல்லும்போது 3-வது மொழிக்கு சிபிஎஸ்இ வாரியத் தேர்வை எழுத வேண்டிய தேவையில்லை. சம்பந்தப்பட்ட பள்ளியின் அளவிலேயே மதிப்பீடு செய்யலாம் என்ற நிலை நிலவுகிறது. இந்தச் சலுகையை 6-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நீட்டிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக நீதிபதிகள் அமர்வு, “சிபிஎஸ்இ 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதே விலக்கு 6-ம் வகுப்பு மாணவர்களுக்கும் தரப்படவேண்டும். மாணவர்களுக்கு சிரமத்தை தர விரும்பவில்லை. மாறாக அவர்களுக்கும் தேவையான வசதிகளை அளிக்க விரும்புகிறோம்” என்றது.