ஜார்க்கண்ட் சட்டப்பேரவை நோக்கி மாணவர்கள் பேரணி: ஸ்ட்ரெச்சரில் வந்து இணைந்த மஹ்தோ

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை நோக்கி மாணவர்கள் பேரணி: ஸ்ட்ரெச்சரில் வந்து இணைந்த மஹ்தோ
Updated on
2 min read

ராஞ்சி: அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி ஜார்க்கண்டில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநில அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மாணவர்கள் சட்டமன்றத்தை நோக்கிய பேரணியை இன்று தொடங்கினர். இந்தப் பேரணியில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஜார்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா (Jharkhand Loktantrik Krantikari Morcha - JLKM) கட்சியைச் சேர்ந்த தேவேந்திராத் மஹ்தோ ஸ்ட்ரெச்சரில் வந்து பங்கேற்றார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப்பணித் தேர்வுகளில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக இரண்டு வாரங்களுக்கும் மேலாகப் போராடி வரும் மாணவர்கள், இன்று (ஆகஸ்ட் 10) சட்டப்பேரவை நோக்கிய பேரணிக்கு அழைப்பு விடுத்தனர். இதையொட்டி, ஜார்க்கண்ட் காவல்துறை சட்டப்பேரவை வளாகத்தைச் சுற்றிலும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. ஜார்க்கண்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ராஞ்சிக்கு வரும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாகத் தடுக்கப்படுவதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

போலீஸாரின் கெடுபிடிகளுக்கு இடையே சட்டப்பேரவை நோக்கிய பேரணியை மாணவர்கள் இன்று தொடங்கினர். ராஞ்சியில் உள்ள பழைய சட்டப்பேரவை வளாகத்திலிருந்து புதிய சட்டப்பேரவை கட்டிடத்தை நோக்கிச் செல்லும் போராட்டக்காரர்கள், காவல்துறையின் தடுப்புகளைத் தாண்டி முன்னேறிச் சென்றனர்.

இந்த கோரிக்கைகளுக்காக ஒன்பது நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் தேவேந்திர நாத் மஹ்தோ, ஆம்புலன்ஸ் மூலம் போராட்ட இடத்திற்குக் கொண்டுவரப்பட்டு ஸ்ட்ரெச்சர் மூலமாக சட்டப்பேரவை நோக்கிய பேரணியில் இணைந்தார். ஸ்ட்ரெச்சரில் இருந்தபடியே பேசிய மஹ்தோ, போராட்டக்காரர்களை யாராலும் தடுக்க முடியாது என்றும், அரசு தங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சட்டப்பேரவையை நோக்கிய பேரணி இப்போது சட்டப்பேரவை வளாகத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள ஜெகன்னாதர் கோயில் அருகே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்புகளுக்கு முன்னால் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

பின்னணி என்ன? -கடந்த சில மாதங்​களாகவே ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (ஜேபிஎஸ்​சி) மற்​றும் ஊழியர் தேர்வு வாரி​யம் (ஜேஎஸ்​எஸ்​சி) மூலம் நடத்​தப்​படும் தேர்​வு​களில் முறை​கேடு​கள் நடப்​ப​தாகக் கூறி மாணவர்​கள் போராடி வரு​கின்​றனர். அரசு தரப்​பில் ஏற்​கெனவே ஐந்து முறை பேச்​சு​வார்த்தை நடத்தப்பட்ட போ​தி​லும், மாணவர்​களின் முக்​கியக் கோரிக்கைகள் ஏற்​கப்​பட​வில்​லை.

இதனால் மாநிலம்​ தழு​விய அளவில்​ போ​ராட்​டங்​கள்​ தீவிரமடைந்து வருகின்​றன. மாணவர்கள் அமைப்பினருடன் ஜார்க்கண்ட் அமைச்சர் சுதிவ்யா குமார் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, தேர்வுகள் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற தலைமையில் ஒரு குழுவை அமைக்க ஜார்க்கண்ட் அரசு முடிவு செய்திருப்பதாக அமைச்சர் சுதிவ்யா தெரிவித்தார். ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைச் சேர்ந்த 3 உறுப்பினர்களுக்கு சிஐடி சம்மன் அனுப்பியது. இதைத் தொடர்ந்து அவர்கள் மூன்று பேரின் ராஜினாமாவையும் ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை நோக்கி மாணவர்கள் பேரணி: ஸ்ட்ரெச்சரில் வந்து இணைந்த மஹ்தோ
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவந்த முதல்வர் விஜய் பேசியது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in