

புதுடெல்லி: இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், லடாக், இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம், அருணாச்சல பிரதேச மாநிலங்களுக்கு இமய மலையின் பனிச்சிகரங்களால் பெருவெள்ளம் ஏற்படக்கூடிய ஆபத்து அதிகமாக உள்ளது.
பொதுவாக இமயமலை சிகரங்களில் பனிப் பாறைகள் உருகிசிகரங்களிலேயே மிகப்பெரிய ஏரிகள் உருவாகும். இந்த ஏரிகளில் மிகப்பெரிய பனிமலைகள் விழும்போது ஏரிகள் உடைந்து பெருவெள்ளம் ஏற்படக்கூடும். இமயமலை சிகரங்களில் தற்போது உருவாகி உள்ள 88 ஏரிகளால் காஷ்மீர் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு பெருவெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிக்கிம் பகுதி இமயமலையின் 16 ஆபத்தான பனிச்சிகரங்களில் அண்மையில் எச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டன. அங்குள்ள 13 பனிச்சிகர ஏரிகளிலும் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் டெல்லியில் நேற்று உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சம்பந்தப்பட்ட மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், மத்திய நீர்வள ஆணையம், இந்திய வானிலை ஆய்வு மையம், புவியியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இமயமலையின் பனிச்சிகரங்களில் உருவாகி உள்ள ஏரிகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஏரிகள் உடைந்தால் எந்தெந்த நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். பெருவெள்ளத்தின்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், நதிகளின் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்துவது ஆகியவை குறித்து கூட்டத்தில் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் கோவிந்த் மோகன் பேசியதாவது: பனிச்சிகர ஏரிகள் உடைந்தாலோ அல்லது பனிமலைகள் உடைந்தாலோ பேரிடர்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தொழில்நுட்பங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
பெருவெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் மாவட்ட நிர்வாகங்கள் மிகுந்த விழிப்புடன் செயல்பட வேண்டும். பனிச்சிகர ஏரிகள் தொடர்பாக கடந்த 2024-ம் ஆண்டில் மத்திய அரசு ஓர்திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டப் பணிகளை இமயமலை பகுதி மாநில அரசுகள் விரைவுபடுத்த வேண்டும். இயற்கை பேரிடர்களின்போது உயிரிழப்பு, பொருட்சேதத்தை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.