ரயில்களில் அதிக சத்தத்துடன் செல்போன் பயன்படுத்தினால் அபராதம், சிறை தண்டனை: தெற்கு ரயில்வே எச்சரிக்கை

ரயில்களில் அதிக சத்தத்துடன் செல்போன் பயன்படுத்தினால் அபராதம், சிறை தண்டனை: தெற்கு ரயில்வே எச்சரிக்கை
Updated on: 
1 min read

சென்னை: ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ஹெட்போன் இல்லாமல் செல்போனில் அதிக சத்தத்துடன் இசை கேட்பது, வீடியோக்கள் அல்லது ரீல்ஸ் பார்ப்பது மற்றும் கேம்கள் விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.

ரயில்களில் பொது மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தடுப்பதையும், சக பயணிகளுக்கு தொந்தரவு இல்லாத பயணத்தை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு தெற்கு ரயில்வே இந்த முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

செல்போனை அதிக சத்தத்துடன் பயன்படுத்துவதால் இடையூறுகள் ஏற்படுவதாக பல பயணிகள் புகார் அளித்துள்ளனர்.

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சில பயணிகள் அதிக சத்தத்துடன் செல்போனில் இசை கேட்பது, வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ் பார்ப்பது அல்லது கேம்களை விளையாடுவது போன்றவற்றில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு இடையூறு விளைவிப்பதாக தெற்கு ரயில்வே பயணிகள் ஆலோசனைக் குழுவினர் தெரிவித்தனர்.

இதனை அடுத்து, ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அதிக சத்தத்துடன் இசை கேட்பது, வீடியோக்கள் அல்லது ரீல்ஸ் பார்ப்பது மற்றும் கேம்கள் விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என பயணிகளை தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.

திருத்தப்பட்ட ரயில்வே சட்டத்தின்படி, விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம். மேலும், எச்சரிக்கைகளை மீறித் தொடர்ந்து இடையூறு விளைவிக்கும் பயணிகளுக்கு 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

இது தொடர்பாக அனைத்து ரயில்வே கோட்டங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை வசூலிக்க டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் மூத்த வணிகப் பிரிவு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

செல்போனில் இசை கேட்கும்போதோ அல்லது வீடியோக்களைப் பார்க்கும்போதோ ஹெட்போன்களைப் பயன்படுத்தவும், தொலைபேசி அழைப்புகளில் பேசும்போது மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பேசவும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரயில்களில் அதிக சத்தத்துடன் செல்போன் பயன்படுத்தினால் அபராதம், சிறை தண்டனை: தெற்கு ரயில்வே எச்சரிக்கை
“முதல்வர் விஜய் காவிரி விவகாரத்தில் மட்டும் கள்ள மவுனம் காப்பது ஏன்?”- தினகரன் கேள்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in