

சென்னை: இன்று 79வது பிறந்தநாள் காணும் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவருமான சோனியா காந்தி இன்று தனது 79வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளை காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், பல்வேறு தலைவர்களும் சோனியா காந்திக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் பெற பிரார்த்திக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘காங்கிரஸ் பேரியக்கத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தியாகம், தன்னலமற்ற பொதுவாழ்வுப் பயணம், மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநாட்டும் உறுதியைப் பிரதிபலிப்பதாக அவரது வாழ்க்கை அமைந்துள்ளது.
முற்போக்கான, அனைவருக்குமான இந்தியாவை நோக்கிய நமது கூட்டு முயற்சிகளுக்கு அவரது கொள்கைப் பாதையும், வழிகாட்டுதலும் தொடர்ந்து வலுவூட்ட வேண்டும் என விழைகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.