

பாட்னா: திருஷ்யம்-3 படத்தைப் பார்த்துவிட்டு தந்தையைக் கொன்றுவிட்டு மகன் தப்பியோடினார். செல்போன் சிக்னலை வைத்து அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பிஹார் மாநிலம் சமஸ்திபூர் அருகிலுள்ள தார்வா கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுவீர் சாஹ்னி (50). இவரது மகன் சிவசங்கர் சாஹ்னி. தந்தைக்கும், மகனுக்கும் இடையே நீண்ட காலமாக சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது. விவசாய நிலத்தை விற்பனை செய்து தனது பங்கை தராததால் தந்தையிடம், சிவசங்கர் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதையடுத்து அவர் தந்தையை விட்டுப் பிரிந்து மனைவியுடன் சூரத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் திருஷ்யம்-3 இந்திப் படத்தை சிவசங்கர் பார்த்துள்ளார். அதில் வரும் நாயகன் அஜய் தேவ்கன், கொலையை மறைப்பதற்காக தடயங்கள், சாட்சிகளை குழப்புதல், டிஜிட்டல் தடயங்களை அழிப்பதைப் பார்த்த அவர் அதேபோல் தந்தையைக் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து சூரத்திலிருந்து 2 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து பிஹாருக்கு வந்துள்ளார். தனது செல்போனை ஆஃப் செய்துவிட்டு கிராமத்துக்கு வந்த அவர், வீட்டின் பின்வாசல் வழியாக நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த தந்தையை கோடாரியால் வெட்டிக் கொன்றுள்ளார்.
செல்போன் சிக்னல் உதவியது
பின்னர் அவர் படோரி ரயில் நிலையத்துக்குச் சென்றுள்ளார். அப்போது அணைத்து வைத்த செல்போனை ஆன் செய்து மனைவியுடன் பேசியுள்ளார். மீண்டும் செல்போனை ஆஃப் செய்துவிட்டு ஊருக்குத் திரும்பியுள்ளார்.
ரகுவீரை கொலை செய்தது யார் எனத் தெரியாமல் போலீஸார் திண்டாடி வந்த நிலையில் படோரி ரயில் நிலையத்தில் அவர் சிறிது நேரம் செல்போன் பயன்படுத்தியது முக்கியத் தடயமாக கிடைத்தது. அதை வைத்து சிவசங்கரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையி்ல், திருஷ்யம்-3 திரைப்படத்தைப் பார்த்த பிறகு இந்தக் கொலையைத் திட்டமிட்டதாகச் சிவசங்கர் ஒப்புக்கொண்டார். அவர் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.