

மோப்ப நாய் ‘டைசன்'
புதுடெல்லி: ஜம்முவின் கீஷ்த்வார் பகுதியில் நேற்று முன்தினம், மத்தியப் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களுடன் இருந்த டைசன் என்ற மோப்ப நாய், தீவிரவாதிகளின் இருப்பிடத்தை நோக்கி குரைத்துள்ளது. இதையடுத்து, டைசனை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். காலில் குண்டு பட்டு ரத்தம் கொட்டியபோதும் டைசன் தொடர்ந்து குரைத்துள்ளது. இதையடுத்து பாதுகாப்புப்படையினர் தொடங்கிய நடவடிக்கையில் 3 தீவிரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
தீவிரவாதிகளின் மறைவிடத்தைக் கண்டுபிடித்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாயான டைசன், இந்த நடவடிக்கையின் நாயகனாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், காயமடைந்த டைசனுக்கு உதம்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. டைசனைப் போல், பல மோப்ப நாய்கள் தீவிரவாதிகளை அடையாளம் காண்பதில் உதவி உள்ளன.
கடந்த 2024-ம் ஆண்டில் காஷ்மீரின் அக்னூர் செக்டரில் ’பாண்டம்' எனும் மோப்ப நாய் காணாமல் போனது. 4 தினங்களுக்கு பின் திரும்பியப் பாண்டம், தீவிரவாதிகளின் மறைவிடத்தைக் கண்டுபிடித்தது. பிறகு அங்கு பாதுகாப்புப் படையினர் சென்று தீவிரவாதிகளைக் சுட்டு வீழ்த்தினர்.
எனினும், கடந்த அக். 28, 2024-ல் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையின்போது பாண்டம் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்தது. இதுபோல், வீர மரணம் அடையும் மோப்ப நாய்களின் உடல்கள் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகின்றன. இத்துடன், அவைகளின் வீர தீர செயல்களைப் பாராட்டும் வகையில் விருதுகளும் வழங்கப்படுகின்றன.
தீவிரவாதிகள் பிடிபட்டது எப்படி? - காஷ்மீர் பாதுகாப்புப் படையினர் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த சீனியர் கமாண்டர் சைபுல்லா ஊடுருவினார். இவரது தலைமையில் 7 தீவிரவாதிகள் சத்ரூ வனப்பகுதியில் பதுங்கியிருந்து தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டனர். காஷ்மீரில் நடைபெற்ற பல தீவிரவாத தாக்குதலில் இவர்களுக்குத் தொடர்பு உள்ளது.
இவர்களைப் பிடிக்க ராணுவத்தின் தனிப்படை பிரிவினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், உளவுப் பிரிவினர், காஷ்மீர் போலீஸார் ஆகியோர் இணைந்து கடந்த 326 நாட்களாக கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சத்ரூ பனிப் மலைப் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தினர். உள்ளூர் மக்கள் தீவிரவாதிகளுக்கு அளித்த ஆதரவு காரணமாக இவர்களை எளிதில் பிடிக்க முடியவில்லை.
சைபுல்லா கூட்டாளிகள் 4 பேரை சுட்டுக் கொன்ற நிலையில் சைபுல்லா உட்பட 3 பேர் மட்டும் பிடிபடாமல் நீண்ட காலமாக தப்பி வந்தனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேடுதல் வேட்டையில் சைபுல்லா உட்பட 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாதுகாப்பு படையினர் கூட்டு முயற்சி, டைசன் மோப்ப நாய், ட்ரோன்கள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் நவீன கருவிகளின் உதவியுடன் சைபுல்லா தலைமையிலான 7 தீவிரவாதிகளை சுட்டுக் கொல்ல மொத்தம் 326 நாட்கள் ஆனது. இவ்வாறு பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.