

ஹைதராபாத்: தெலங்கானாவில் போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளிவந்த நபர் ஆறு பேரை படுகொலை செய்த விவகாரத்தில், போக்சோ வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காத ஷாபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி ஷாபாத் அருகே வசிக்கும் மைனர் பெண் (17) ஒருவருக்கு, தெய்வாலகூடா பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (38) என்பவர், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில், போலீஸார் விசாரணை நடத்தி கடந்த மே மாதம் ராஜ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீனில் ராஜ்குமார் வெளியே வந்தார். அன்று இரவே தன் மீது புகார் அளித்த மைனர் பெண்ணின் வீட்டுக்கு சென்று, அந்தப் பெண்ணின் தாய் லட்சுமி, பாட்டி ருக்கம்மாவை சரமாரியாகக் கத்தியால் வெட்டினார். பின்னர் அந்த மைனர் பெண்ணை அகில் சாகர் ஏரிக்கரை அருகே கொண்டு சென்று அவரையும் படுகொலை செய்துள்ளார்.
அதன் பின்னர், நேராக தனது வீட்டுக்கு சென்ற ராஜ்குமார், அங்கிருந்த தனது மனைவி சரிதா (33), மகன்கள் பரிக் ஷித் (4), தைவீக் ஷி (2) ஆகிய மூவரையும் கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ளார்.
போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர், ஷாபாத் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்த உடனேயே ராஜ் குமாரைக் கைது செய்யவில்லை என்றும், அவர்களின் அலட்சியமே ஆறு பேர் கொடூரமாகக் கொல்லப்படக் காரணம் என்றும் குற்றம் சாட்டினர். இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இவ்வழக்கை விசாரித்து வந்த உதவி ஆய்வாளர் டி.ரமேஷைப் பணி இடைநீக்கம் செய்தும், ஷாபாத் காவல் ஆய்வாளர் பி. காந்தா ரெட்டிக்கு மெமோ அனுப்பியும் ஃபியூச்சர் சிட்டி காவல் ஆணையர் தருண் ஜோஷி உத்தரவிட்டார்.
6 கொலைகளை செய்த ராஜ்குமாரை உடனடியாகக் கைது செய்யக் கோரி, ஷாபாத் காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள சாலையில் சிறுமியின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமியையும் அவரது தாயாரையும் துன்புறுத்துவதாக மிரட்டிய குற்றவாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருந்தும், காவல் துறையினர் அவரை உடனடியாகக் கைது செய்யவில்லை என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
"நாங்கள் எங்கள் புகார் குறித்து காவல் துறையினரிடம் வலியுறுத்தி வந்தோம். ராஜ்குமார் தலைமறைவாக இருப்பதாகவே போலீசார் கூறி வந்தனர். ஆனால், அவர் நகரில் சுதந்திரமாக நடமாடுவதை நாங்கள் பார்த்தோம். காவல் துறையினர் தங்கள் கடமையைச் சரியாகச் செய்திருந்தால், இந்தச் சம்பவம் நடந்திருக்காது" என்று கொல்லப்பட்ட சிறுமியின் மாமா கூறினார். மேலும், ஒரு வருடத்திற்கு முன்பு சிறுமியின் தந்தை இறந்ததற்கும் ராஜ்குமார் தான் காரணம் என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். ஆனால், உடல்நலக்குறைவு காரணமாகவே அவர் இறந்தார் என்று காவல் துறை தெரிவித்தது.