தாயார்களாக சீதை, ஜானகி, கவுல்சயா... அயோத்தியில் ஆன்மிக மயமாகும் எஸ்ஐஆர் - நடப்பது என்ன?
புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் அயோத்தியில் எஸ்ஐஆர் பதிவு, ஆன்மிக உருவெடுக்கிறது. இங்குள்ள துறவிகள் தம் தாயின் பெயராக சீதை, ஜானகி, கவுல்சயா உள்ளிட்ட கடவுள்களின் பெயர்களை குறிப்பிடுகிறனர்.
மத்திய தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் சிறப்பு திருத்தம் (எஸ்ஐஆர்) உபியிலும் தொடர்கிறது. இதற்கானப் படிவங்களில் வாக்காளர்கள் தம் தாயின் பெயராக இந்துக்களால் வணங்கப்படும் பெண் கடவுள்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறனர்.இதில், சீதை, ஜானகி, கவுசல்யா மற்றும் சுமித்ரா ஆகியோரில் ஒரு பெயரை தம் தாயாகக் குறிப்பிடுகின்றனர். தந்தையின் பெயராக இந்த துறவிகள் தமது குருக்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளனர்.
துறவிகளின் குருக்களில் கல்வி குரு, தீட்சா குரு என இரண்டு வகை உள்ளனர். இதில் தீட்சை அளித்தவரையே தம் தந்தை ஸ்தானத்தில் போற்றுவதும் வழக்கமாக உள்ளது. எனவே, எஸ் ஐ ஆர் விண்ணப்பங்களில் தம் தந்தையாக தீட்சா குருவின் பெயரையே துறவிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த முறையை அயோத்தி இந்து தாம் ஆசிரமத்தின் தலைவரும் பாஜகவின் முன்னாள் எம்பியுமான ராம் விலாஸ் வேதாந்தி துவக்கி வைத்துள்ளார்.
இது குறித்து அயோத்தியின் மூத்த துறவிகளில் ஒருவரான முனைவர்.ராம் விலாஸ் வேதாந்தி கூறுகையில், ‘ சிறுவயது முதல் அயோத்தியில் வாழும் பெரும்பாலான துறவிகள் பொதுக் கல்வியறிவு இல்லாதவர்கள்.
இவர்களுக்கு தம் பெற்றோரின் பெயர்கள் தெரியாது. தமது ஆன்மிகக் குருக்களின் பெயர்களை மட்டுமே அவர்கள் அறிவர். இவர்களிடம் அவர்களது தாயின் பெயரைக் கேட்டால் சீதா மாதா, ஜானகி தேவி, சுபத்ரா மற்றும் கவுசல்யா தேவிகளின் பெயர்களைக் குறிப்பிடுவதும் வழக்கம்.
துறவியான பின் தந்தைக்கான இடத்தில் தமது குருவையே அவர்கள் குறிப்பிடுகின்றனர். இதில் எதையுமே அவர்கள் மறைக்காமல் மத்திய மற்றும் உபி அரசுகளுக்கு உதவுகின்றனர். இதை நான் முதல் நபராக எஸ்ஐஆர் விண்ணப்பத்தில் தந்தையாக குருவையும், தாயாக ஜானகி பெயரையும் குறிப்பிட்டது பலராலும் தொடர்கிறது.” எனத் தெரிவித்தார்.
துறவியான வேதாந்தியைப் பின்பற்றும் அயோத்தியின் துறவிகள், எஸ்ஐஆர் படிவங்கள் சனாதன முறைப்படி பூர்த்தி செய்யப்படுவதாகப் பெருமிதம் கொள்கின்றனர். எஸ்ஐஆர் விண்ணப்பத்தில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி தம் தாய், தந்தை பெயர்களைக் குறிப்பிட வேண்டி உள்ளது.ஆனால், இதற்கான ஆதாரங்கள் அளிக்கத் தேவையில்லை எனக் கருதப்படுகிறது. இந்த வாய்ப்பைத் தனக்கு சாதகமாகத் துறவிகள் பயன்படுத்தி இதுபோல் பெயர்களை குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம், இதுபோல் எழுதிய வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அளித்து விளக்கம் கேட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, உபியின் காஜியாபாத்தில் 11.41 லட்சம் (40.23%) பெயர்களும், லக்னோவில் 12.32 லட்சம் (30.86%) பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளன. தேர்தல் ஆணையத்தின் தீவிர முயற்சிகளுக்குப் பிறகும், மாநிலம் முழுவதும் 2.98 கோடி மக்களின் கணக்கெடுப்புப் படிவங்கள் இன்னும் நிலுவையில் உள்ளன.
இச்சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எஸ்ஐஆரின் கீழ் கணக்கெடுப்புப் படிவங்களை விநியோகிப்பதற்கும் சமர்ப்பிப்பதற்கும் உள்ள கடைசித் தேதி வரும் டிச.26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
