

புதுடெல்லி: எஸ்ஐஆர் உறுதிமொழி மற்றும் படிவம் 6 தனித்தனியாக பிரிக்கப்பட்டு உள்ளன. இது தேர்தல் ஆணையத்தின் இசிஐநெட் இணையத்தில் அமலுக்கு வந்துள்ளது.
புதிய வாக்காளர் பெயரை பட்டியலில் சேர்ப்பதற்கு படிவம் 6-ஐ சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் படிவத்தின் மூலம் விண்ணப்பதாரரின் பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. விண்ணப்பதாரரின் பெற்றோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்த தகவல்களும் கோரப்படுகின்றன.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது (எஸ்ஐஆர்) படிவம் 6-ல் திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி கடந்த 2003-ம் ஆண்டு எஸ்ஐஆர் பட்டியலில் வாக்காளர் பெயர் இடம்பெற்றிருக்கிறதா அல்லது அவரது தாய், தந்தையின் பெயர் இடம்பெற்றிருக்கிறதா என்பதைக் குறிப்பிட வேண்டும்.
எஸ்ஐஆர் ஆன்லைன் பதிவேற்றத்தின்போது இந்த பகுதியைப் பூர்த்தி செய்தால் மட்டுமே அடுத்த நிலைக்குச் செல்ல முடியும் என்ற சூழல் இருந்தது. இந்தப் புதிய நடைமுறைக்கு தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சாந்து, விவேக் ஜோஷி ஆட்சேபம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. எஸ்ஐஆர் பணியை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பில் அண்மையில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆன்லைன் பதிவேற்றத்தில் படிவம் 6, எஸ்ஐஆர் உறுதிமொழி தனித்தனியாக பிரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நடைமுறை தேர்தல் ஆணையத்தின் இசிஐநெட் இணையத்தில் நேற்று அமலுக்கு வந்தது. இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறும்போது, “படிவம் 6 மற்றும் எஸ்ஐஆர் உறுதிமொழி படிவம் ஆகியவை ஒரே ஓடிபி மற்றும் மின்னணு கையொப்பம் மூலம் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இனிமேல் இரு படிவங்களாக தனித்தனியாக சமர்ப்பிக்க வேண்டும். தனித்தனியாக ஓடிபி, மின்னணு கையொப்பமிட வேண்டும்" என்று தெரிவித்தன.