

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலில் நேற்று ஏற்றப்பட்ட புனிதக் கொடி பற்றி முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமஜென்ம பூமி கோயிலின் கட்டுமானப் பணி சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து, அந்தக் கோயிலின் உச்சியில், ‘தர்ம துவாஜா’ என்ற காவிக் கொடியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஏற்றினார். பண்டையக் காலம் முதல் கோவிதாரா (மந்தாரை) என்ற மரத்தில் ஏற்றப்படும் இது ‘கோவிதாரா கொடி’ என்றழைக்கப்படுகிறது. இது, கலியுகத்தில் கூட வெள்ளி யுகத்தின் உணர்வைத் தூண்டும் எனக் கருதப்படுகிறது.
இக்கொடியைப் பற்றிய குறிப்பு வால்மீகி ராமாயணத்தின் அயோத்தி காண்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கொடியை ஏற்ற முடிவு செய்ததன் மூலம் ராமஜென்மபூமி கோயில் அறக்கட்டளையினர், அயோத்தியை கவுரவித்திருப்பதாகவும் கருதப்படுகிறது. கோவிதாரா மரம் சனாதன கலாச்சாரத்தின் விலைமதிப்பற்ற பொக்கிஷமாகவும் மதிக்கப்படுகிறது.
இது அயோத்தியின் அடையாளமாகவும், பண்டைய பாரம்பரியமாகவும் இருந்து வருகிறது. இருப்பினும், ரகு வம்சத்தின் சின்னமான இந்த அரசக் கொடி நவீன இந்தியாவில் மறக்கப்பட்டது. இந்த மரத்தின் கொடி பற்றி லலித் மிஸ்ரா உள்ளிட்ட பல வரலாற்று ஆசிரியர்கள் ஆய்வு செய்துள்ளனர். தொடக்கத்தில் கச்சனார் மரம்தான், ரகு வம்ச மரம் எனக் கருதப்பட்டது. ஆனால் ஆராய்ச்சிக்குப் பிறகு அது, கோவிதாரா என கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே, ஸ்ரீ ராமஜென்மபூமி கோயில் அறக்கட்டளையினர் இந்தக் கொடியை ஏற்ற முடிவு செய்துள்ளனர். கோவிதாரா மரத்தின் படத்துடன் சூரியன் மற்றும் ஓம் சின்னங்களும் இந்தக் கொடியில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தக் கொடியை அகமதாபாத்தில் உள்ள ஒரு பாராசூட் தயாரிப்பு நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதன் துணி நைலான் மற்றும் பட்டு கலவையினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயில் பிராண பிரதிஷ்டையின்போது, அதன் வளாகத்தில் கோவிதாரா மரங்கள் நடப்பட்டன. அவை இப்போது சுமார் 8 முதல் 10 அடி உயரம் வளர்ந்துள்ளன. கோவிதாரா தொடர்பான ஆராய்ச்சியின்படி, மந்தாரை மரத்தின் பண்புகளை பாரிஜாத மரத்துடன் இணைத்து வளர்க்கப்பட்டது.
முதல் கலப்பின தாவரமாகக் கருதப்படுகிறது. 15 முதல் 25 மீட்டர் உயரம் வளரும் இந்த மரம், பூக்கும் மற்றும் பழம் தரும் மரமாகும். இது கச்சனார் மரத்தின் பூக்களை ஒத்த ஊதா நிற பூக்களைத் தருகிறது. இதன் பழம் சுவையாகவும் சத்தானதாகவும் கருதப்படுகிறது.