

மும்பை: சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவதை ஆதரித்து, ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெறும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பட்னாவிஸ் கூறியதாவது: மக்களவையின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மகளிர் இடஒதுக்கீட்டை விரைவுபடுத்தவும் கொண்டு வரப்பட்ட அரசியல் சாசன திருத்த மசோதாவைத் தோற்கடித்ததன் மூலம், எதிர்க்கட்சிகள் பெண்களுக்கு மிகப் பெரிய துரோகத்தை இழைத்துவிட்டன. இதனால், கடந்த ஏப்ரல் 17-ம் தேதி ஜனநாயகத்துக்கு கருப்பு தினமாகும்.
ஒரு கோடி பெண்களிடம் கையெழுத்தைப் பெற்று இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு கடும் அழுத்தத்தை உருவாக்குவோம். அதன் மூலம் இந்த மசோதாவை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தை அவர்களுக்கு ஏற்படுத்துவோம். 2029-க்குள் மகளிர் இடஒதுக்கீடு உறுதி செய்யப்படுவதை நோக்கமாகக் கொண்டு, இந்த மசோதா நிறைவேறும் வரை ஆளும் கூட்டணி ஓயாது.
காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), சிவசேனை (யுபிடி) ஆகிய கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, அவர்களின் பெண் எதிர்ப்பு மனநிலையை காட்டுகிறது. அவர்கள் இந்தியாவின் 70 கோடி பெண்களை அவமதிக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர்.
மகாத்மா ஜோதிராவ் புலே மற்றும் அம்பேத்கர் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளின் கொள்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன. இந்த மசோதாவில் உள்ள குறைகள் குறித்து எந்தவொரு எதிர்க்கட்சித் தலைவரும் என்னுடன் பொது மேடையில் விவாதிக்க தயாரா ? இவ்வாறு பட்னாவிஸ் தெரிவித்தார்.